சன் ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு எதிராக கே.எல்.ராகுல், ஹூடா அரை சதம்

மும்பை: சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் கேப்டன் ராகுல், தீபக் ஹூடா அரை சதம் விளாசினார். நவி மும்பையில் உள்ள பட்டேல் ஸ்போர்ட்ஸ் அகடாமி மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன் ரைசஸ் ஐதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல், குவின்டன் டீ காக் களமிறங்கினர். டீ காக் 1 ரன் மட்டுமே எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் வில்லியம்சன் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த எவின் லூயிஸ் 1 ரன்னிலும், மனீஷ் பாண்டே 11 ரன்னிலும் அவுட்டாகி வெளியேற, லக்னோ 27 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.

இந்த நிலையில், கே.எல்.ராகுல் - தீபக் ஹூடா ஜோடி 4வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 87 ரன் சேர்த்தது. தீபக் ஹூடா 51 ரன் (33 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ரொமாரியோ ஷெப்பர்டு வேகத்தில் ராகுல் திரிபாதி வசம் பிடிபட்டார். கே.எல்.ராகுல் 68 ரன் (50 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி நடராஜன் வேகத்தில் போல்டு ஆகி வெளியேறினார். அடுத்து வந்த குருணால் பாண்டியா 6 ரன்னில் நடராஜன் வேகத்தில் பெவிலியன் திரும்பினார். ஆயுஷ் படோனி 19 ரன் எடுத்து (11 பந்து, 3 பவுண்டரி) ரன் அவுட்டானார். ஜேசன் ஹோல்டர் 3 பந்தில் 8 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன் குவித்தது.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெப்பர்டு, நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 170 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் களமிறங்கியது.

Related Stories: