இலங்கையை போன்றே இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு ஒன்றிய அரசே காரணம்: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சென்னை: இலங்கையில் நிலவும் பொருளாதார வீழ்ச்சி போன்றே இந்தியாவில் நடைபெறுவதற்கு ஒன்றிய அரசே காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பெட்ரோல், டீசல் மற்றும் எரிபொருள், சுங்கச்சாவடி  விலையுயர்விற்கு காரணமான ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் சென்னை பாரிமுனையில் உள்ள குறளகம் முன்பாக 50க்கும் மேற்பட்டோர் திரண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன முழுக்கமிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்: பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட எரிபொருள் மற்றும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தபட்டு வருகிறது மேலும், இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சி போன்று இந்தியாவிலும் ஏற்படுவதற்கு ஒன்றிய அரசு தான் காரணம். ஒன்றிய அரசானது பெரும்பான்மை சமூகத்தினரை வைத்து சிறுபான்மை சமூகத்தினரை ஒடுக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அடுத்தகட்டமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையேற்றத்தை கண்டிக்கும் விதமாக ஒருமித்த கருத்துடைய அனைவரையும் ஒன்றிணைத்து பெரிய அளவில் ஒன்றிய அரசிற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: