பாக். நாடாளுமன்றம் கலைப்பு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அதன் மீதான வாக்கெடுப்பு துணை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் இம்ரான் கான் அதிபருக்கு பரிந்துரைத்தார். அவரது கோரிக்கையை ஏற்ற பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி, நேற்று நாடாளுமன்றத்தை கலைத்ததற்கான அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மேலும் இடைக்கால பிரதமர் நியமிக்கப்படும் வரையில் பிரதமர் பதவியில் இம்ரான்கான் நீடிப்பார் என்று அதிபர் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே 90 நாட்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் எனவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. அதேநேரம் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது அரசியலமைப்புக்கு எதிரானது எனக்கூறி  எதிர்க்கட்சிகள் தரப்பில் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டன. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெறும் நிலையில், நாடாளுமன்றத்தை கலைப்பது உள்பட பிரதமர் மற்றும் அதிபரின் அனைத்து உத்தரவுகளும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு உட்பட்டதாக இருக்கும் என்று  பாகிஸ்தான் தலைமை நீதிபதி உமர் அட்டா பண்டியல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று பிற்பகல் கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது வரவிருக்கும் தேர்தல்கள் உட்பட பல்வேறு உத்திகள் குறித்து விவாதிக்கப்படும். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆசாத் உமர் கூறுகையில், ‘இம்ரான் கான் தலைமையிலான எங்களது கட்சி தேர்தலுக்குத் தயாராகி வருகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறகிறது’ என்றார்.

Related Stories: