பைனலில் இங்கிலாந்தை வீழ்த்தி அசத்தல்; 7வது முறையாக ஆஸி. உலக சாம்பியன்: 170 ரன் விளாசினார் அலிஸா

கிறைஸ்ட்சர்ச்: ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் பைனலில், இங்கிலாந்து அணியை 71 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை அலிஸா ஹீலி 170 ரன் விளாசி அசத்தினார். ஹேக்லி ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த பரபரப்பான பைனலில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா மோதியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. அலிஸா ஹீலி, ரேச்சல் ஹேன்ஸ் இருவரும் ஆஸி. இன்னிங்சை தொடங்கினர். அபாரமாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 29 ஓவரில் 160 ரன் சேர்த்தது.

ரேச்சல் 68 ரன் (93 பந்து, 7 பவுண்டரி) விளாசி எக்ளஸ்டோன் பந்துவீச்சில் பியூமான்ட் வசம் பிடிபட்டார். அடுத்து அலிஸாவுடன் பெத் மூனி இணைந்தார். இங்கிலாந்து பந்துவீச்சை பதம் பார்த்த இருவரும் 2வது விக்கெட்டுக்கு 156 ரன் சேர்த்தனர். ஒருநாள் போட்டிகளில் தனது 5வது சதத்தை பதிவு செய்த அலிஸா 170 ரன் (138 பந்து, 26 பவுண்டரி) விளாசி ஷ்ரப்சோல் பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார். கார்ட்னர் 1, கேப்டன் மெக் லான்னிங் 10 ரன்னில் ஆட்டமிழக்கம், பெத் மூனி 62 ரன் எடுத்து (47 பந்து, 8 பவுண்டரி) ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன் குவித்தது. டாலியா மெக்ராத் 8, எல்லிஸ் பெர்ரி 17 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் அன்யா ஷ்ரப்சோல் 3, எக்ளஸ்டோன் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 357 ரன் எடுத்தால் கோப்பையை தக்கவைக்கலாம் என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. பியூமான்ட், வியாட் இருவரும் துரத்தலை தொடங்கினர். வியாட் 4, பியூமான்ட் 27 ரன் எடுத்து மேகன் ஷுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹீதர் நைட் 26 ரன்னில் வெளியேறினார். ஒரு முனையில் நதாலியே சைவர் உறுதியுடன் போராட... ஏமி ஜோன்ஸ் 20, டங்க்லி 22, கேதரின் பிரன்ட் 1, எக்ளஸ்டோன் 3, கிராஸ் 2, சார்லி டீன் 21, ஷ்ரப்சோல் 1 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர்.

இங்கிலாந்து அணி 43.4 ஓவரில் 285 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சைவர் 148 ரன்னுடன் (121 பந்து, 15 பவுண்டரி, 1 சிக்சர்) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. பந்துவீச்சில் அலனா கிங், ஜெஸ் ஜோனசன் தலா 3, ஷுட் 2, டாலியா, கார்ட்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 71 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா 7வது முறையாக உலக கோப்பையை முத்தமிட்டது. அந்த அணியின் விக்கெட் கீப்பரும் தொடக்க வீராங்கனையுமான அலிஸா ஹீலி பைனலின் சிறந்த வீராங்கனை மற்றும் தொடரின் சிறந்த வீராங்கனையாக விருதுகளை அள்ளினார்.

சாதனை மேல் சாதனை

* ஆஸ்திரேலியாவின் 356/5, மகளிர் உலக கோப்பை பைனலில் எடுக்கப்பட்ட முதல் 300+ ஸ்கோராக அமைந்தது. முன்னதாக, 2005ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஆஸி. 7 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

* அலிஸா 170 ரன் விளாசியது, ஒருநாள் போட்டிகளில் ஆஸி. வீராங்கனை எடுத்த 2வது அதிகபட்ச ஸ்கோராகும். 1997 உலக கோப்பையில் டென்மார்க் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 229 ரன் விளாசிய பெலிண்டா கிளார்க் முதலிடத்தில் உள்ளார்.

* அலிஸா - ரேச்சல் ஜோடி 160 ரன் சேர்த்ததும் புதிய சாதனையாக அமைந்தது. லீக் சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அலிஸா - மூனி ஜோடி 156 ரன் சேர்த்து படைத்த சாதனை நேற்று முறியடிக்கப்பட்டது.

Related Stories: