வெயிலின் தாக்கம் குறைந்தது; நீலகிரியில் குளுகுளு காலநிலை: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஊட்டி: நீலகிரியில் வெயிலின் தாக்கம் குறைந்து, குளுகுளு காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சமவெளிப்பகுதிகளில் இம்முறை வெயிலின் தாக்கம் முன்னதாகவே துவங்கி உள்ளது. கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தற்போது வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் ஊட்டி வருவது அதிகரித்துள்ளது. சமவெளிப் பகுதிகளில் மட்டுமின்றி, நீலகிரியிலும் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

கடந்த ஒரு வாரமாக நீலகிரியிலும் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. ஆனால், கடந்த இரு நாட்களுக்கு மேலாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மேக மூட்டம் காணப்பட்டது. நேற்று காலை முதல் மேக மூட்டம் காணப்பட்டது. இதனால், காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வெயிலில் வாடி வந்த உள்ளூர் மக்கள் மற்றும் சமவெளிப் பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இந்த காலநிலை மிகவும் குளிர்ச்சியாகவே உள்ளது. ஊட்டி மட்டுமின்றி நீலகிரியில் பெரும்பாலான பகுதிகளில் நேற்று வெயிலின் தாக்கம் சற்று குறைந்தே காணப்பட்டது.

படகு இல்லம், தாவரவியல் பூங்கா, பைக்காரா போன்ற பகுதிகளில் மந்தமான காலநிலை மற்றும் லேசான காற்றும் வீசியதால் ‘குளு குளு’ என இருந்தது. இந்த காலநிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்து சென்றனர். ஊட்டியில் நேற்று அதிபட்சமாக 23 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 11 டிகிரி செல்சியசாகவும் வெப்பநிலை பதிவாகியிருந்தது.  மாலை நேரங்களில் குளிர் சற்று அதிகம் காணப்பட்டது.

Related Stories: