சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும் மருந்துகள் விலை உயர்வுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு

புதுடெல்லி: வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1ம் தேதி முதல்  உயர்த்தப்படும் என்று தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம்  சமீபத்தில் அறிவித்தது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது.இதனால், 800-க்கும் மேற்பட்ட  அத்தியாவசிய மருந்துகளின் விலை  உயர்ந்துள்ளன. இந்த விலை உயர்வுக்கு மார்க்சிஸ்ட், சிவசேனா எம்பி.க்கள் மாநிலங்களவையில் நேற்று எதிர்ப்பு தெரிவித்தனர்.  மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின் போது இப்பிரச்னையை எழுப்பிய  மார்க்சிஸ்ட் உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், ‘‘800 மருந்துகளின்  விலைகள் 11 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது சாதாரண மக்களை  கடுமையாக பாதிக்கும்.

நம் நாட்டில் இதற்கு முன் மருந்துகள் விலை இதுபோல் உயர்த்தப்பட்டதே இல்லை. ஒன்றிய அரசு இதை தவிர்த்து இருக்கலாம். பெரும்பாலான மக்களுக்கு சமூக பாதுகாப்போ அல்லது மருத்துவ இன்சூரன்ஸ் திட்டம் எதுவும் இல்லை. அவர்களுடைய நிலைமையை யோசித்து பார்த்து, இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்,’’ என்றார்.சிவசேனாவை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி பேசுகையில், ‘‘நாள்தோறும் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.  மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத இந்த அரசு  சாதாரண மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மருந்துகளின் விலையை குறைப்பது பரிசீலிக்க வேண்டும்,’’ என்றார்.

Related Stories: