தேனி- ஆண்டிபட்டி இடையே பயணிகள் ரயில் சோதனை ஓட்டம்-முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

தேனி : தேனி- ஆண்டிபட்டி இடையே நடந்த பயணிகள் ரயில் சோதனை ஓட்டத்தை தென்னக ரயில்வே துறை முதன்மை பாதுகாப்பு அதிகாரி மனோஜ் அரோரா ஆய்வு செய்தார்.

மதுரை- போடி மீட்டர் கேஜ் ரயில் சேவை கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிறுத்தப்பட்டது. அதன்பின் அகல ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. இதில் மதுரையிலிருந்து தேனி வரையிலான அனைத்து பணிகளும் முடிவடைந்து உள்ளன. தற்போது தேனியிலிருந்து போடி வரை அகல ரயில் பாதை பணிகள் நடந்து வருகின்றன.

இதை தொடர்ந்து மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரை முதல் கட்டமாகவும், உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி வரை இரண்டாம் கட்டமாகவும் பயணிகள் ரயில் போக்குவரத்து சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. பின்னர் ஆண்டிப்பட்டியில் இருந்து தேனி வரை ரயில் இயக்குவதற்கான சோதனை ஓட்டம் 4 முறை நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று ஆண்டிபட்டியில் இருந்து தேனி வரை உள்ள ரயில் தண்டவாள பணிகள் பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்த ஆய்வு பணி நேற்று நடந்தது.  

இதற்காக நேற்று காலை 11 மணியளவில் ஆண்டிபட்டியில் இருந்து தேனி ரயில் நிலையத்திற்கு 5 பயணிகள் கேரேஜ் உடன் கூடிய ரயில் வந்தது. இந்த பயணிகள் ரயில் நேற்று மாலை தேனி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து ஆண்டிப்பட்டி ரயில் நிலையத்திற்கு சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் புறப்பட்டு சென்றது. இதனை தென்னக ரயில்வே துறை முதன்மை பாதுகாப்பு அதிகாரி மனோஜ் அரோரா தலைமையில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

முன்னதாக ரயிலுக்கு பூஜை நடத்தப்பட்டு வழி அனுப்பப்பட்டது. இதில் தேனி மாவட்ட ஊராட்சி தலைவர் பிரீத்தா நடேஷ், தேனி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பாலப்பணியினை விரைந்து முடிக்கவும்

நேற்று நடந்த ரயில் சோதனை ஓட்டத்திற்காக தேனி நகரில் உள்ள பெரியகுளம் சாலை, பாரஸ்ட் ரோடு, அரண்மனை புதூர் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரயில்வே கேட்டுகள் 4 முறை அடைக்கப்பட்டது.

ஒவ்வொரு முறையும் சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக ரயில்வே கேட் மூடப்பட்டதால் அப்பகுதிகளில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் நெரிசலில் காத்திருந்தன. இதில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்வதற்காக வந்த ஆம்புலன்ஸ்களும் சிக்கி கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அரண்மனை புதூர் ரயில்வே கேட் பகுதியில் விரைவில் மேம்பாலம் அமைக்கும் பணியினை நெடுஞ்சாலை துறை துவக்கி முடிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: