உத்தரப் பிரதேசத்தில் வினாத்தாள் லீக்... தவறு இழைத்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய முதல்வர் யோகி உத்தரவு!!

லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலத்தில் 12ம் வகுப்பு ஆங்கில தாள் இறுதித் தேர்வில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் 24 மாவட்டங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டது. நேற்று மதியம் 2 மணிக்கு ஆங்கில தாள் தேர்வு நடப்பதாக இருந்தது. ஆனால் முன்கூட்டியே வினாத்தாள் வெளியானதால் சில மணி நேரத்திற்கு முன்பு  பாலியா, எடா, பாஹ்பத், பதோன், சீதாபூர், கான்பூர், லலித்பூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மற்ற 51 மாவட்டங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த வினாத்தாள் கசிவு பாலியா என்ற இடத்தில் நடந்து இருக்க வாய்ப்பு என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

தவறு இழைத்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். தேர்வு ரத்து செய்யப்பட்ட 24 மாவட்டங்களில் விரைவில் மறுதேர்வு நடத்தப்படும் என்றும் வினாத்தாள் கசிவு குறித்து சிறப்பு குழு விசாரணை நடத்தவும் ஆணையிட்டுள்ளார். மறுபுறத்தில் பிரயாக்ராஜில் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான இந்தி வினாத்தாளில் மரத்திற்கு எதிர்சொல் என்ன என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆங்கில தாளில் 60 என்ற எண்ணிற்கு எதிர்சொல் என்ன என்ற கேள்வியும் இடம்பெற்று இருப்பது மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. செவ்வகத்தை எப்படி அடையாளம் காண்பது என்ற கேள்வியும் கேட்கப்பட்டு இருப்பதால் மாணவர்கள் குழம்பி போய் நின்றனர்.

Related Stories: