ஐசிசி மகளிர் உலக கோப்பை முதல் அரையிறுதியில் இன்று ஆஸி.-வெ.இண்டீஸ் மோதல்

வெலிங்டன்: ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் தொடரின் முதல் அரையிறுதியில் ஆஸ்திரலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதுகின்றன. லீக் சுற்றில் ஆஸி. தொடர்ச்சியாக 7 ஆட்டங்களிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்தது. வெலிங்டனில் மார்ச் 14ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஒரு போட்டியில் கூட தோற்காமல் அரையிறுதிக்கு முன்னேறியதால் ஆஸி. வீராங்கனைகள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் உள்ளனர். அதே சமயம், இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் தோற்றதை வெஸ்ட் இண்டீஸ் அணியினர் உற்சாகமாகக் கொண்டாடினர்.

இந்தியா கடைசி பந்து வரை போராடி தோற்றதால், வெஸ்ட் இண்டீஸ் 7 புள்ளியுடன் 4வது இடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது (7 போட்டியில் 3 வெற்றி, 3 தோல்வி; ஒரு ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது). இந்த நிலையில், வெலிங்டனில் இன்று நடக்கும் முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் மோதுகின்றன. ஆஸி. இதுவரை நடந்த 11 உலக கோப்பையில் 8 முறை பைனலுக்கு முன்னேறி 6 முறை கோப்பையை வசப்படுத்தியுள்ளது. 2013ல் மட்டும் பைனலுக்கு முன்னேறி உள்ள வெஸ்ட் இண்டீஸ், அந்த ஆட்டத்திலும் ஆஸி.யிடம் மண்ணைக் கவ்வியது குறிப்பிடத்தக்கது. வரலாறு ஆஸி.க்கு சாதகமாக இருந்தாலும், இந்த முறை ஸ்டெபானி டெய்லர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் மிகுந்த முனைப்புடன் போராடி வருவதால் அரையிறுதியில் அனல் பறப்பது உறுதி.

Related Stories: