கேப்டன் சாம்சன் அதிரடி அரை சதம் ராஜஸ்தான் ராயல்ஸ் ரன் குவிப்பு

புனே: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், கேப்டன் சஞ்சு சாம்சனின் அதிரடி அரை சதம் மற்றும் பட்லர், படிக்கல், ஹெட்மயரின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அபாரமாக ரன் குவித்தது.

மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பந்துவீசியது. பட்லர், ஜெய்ஸ்வால் இருவரும் ராஜஸ்தான் இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6 ஓவரில் 58 ரன் சேர்த்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தது. ஜெய்ஸ்வால் 20 ரன் (16 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), பட்லர் 35 ரன் (28 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர்.

கேப்டன் சஞ்சு சாம்சன் - தேவ்தத் படிக்கல் ஜோடி சிக்சரும் பவுண்டரியுமாகப் பறக்கவிட, ராஜஸ்தான் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் எகிறியது. இருவரும் 3வது விக்கெட்டுக்கு 73 ரன் சேர்த்து மிரட்டினர். படிக்கல் 41 ரன் (29 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), சாம்சன் 55 ரன் (27 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் ஹெட்மயர் தன் பங்குக்கு இமாலய சிக்சர்களை விளாசி அசத்த, ராஜஸ்தான் ஸ்கோர் 200 ரன்னை கடந்தது. ஹெட்மயர் 32 ரன் (13 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி, நடராஜனின் துல்லியமான யார்க்கரில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார்.

அதே ஓவரின் கடைசி பந்தில் பராக் (12 ரன்) விக்கெட்டை பறிகொடுக்க, ராயல்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன் குவித்தது. கோல்டர் நைல் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் நடராஜன், உம்ரான் மாலிக் தலா 2, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ராஜஸ்தான் இன்னிங்சில் மொத்தம் 16 பவுண்டரி, 14 சிக்சர் விளாசப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 211 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சன்ரைசர்ஸ் களமிறங்கியது. கேப்டன் கேன் வில்லியம்சன், அபிஷேக் ஷர்மா இருவரும் துரத்தலை தொடங்கினர்.

Related Stories: