கடலூர் மாவட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் மறியல்

கடலூர் : ஒன்றிய அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்தும், பொதுத்துறை விற்பனையை கைவிட வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை அமலாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர்சந்தை பகுதியில் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் திரண்டனர்.

தொ.மு.ச. மண்டல தலைவர் பழனிவேல், சிஐடியு மாவட்ட செயலாளர் கருப்பையன், விவசாயிகள் சங்க மாநில செயலாளர் மாதவன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொது செயலாளர் குளோப் ஆகியோர் தலைமையில் ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட கவுன்சில் தலைவர் மனோகரன், விவசாய சங்க மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக கடலூர் அண்ணாபாலம் நோக்கி சென்றனர். அப்போது, சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்தனர்.  

விருத்தாசலம்: தொமுச பேரவை, சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ் உள்ளிட்ட மத்திய சங்கங்களின் சார்பில் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் தமிழகம் தழுவிய நிலையில் நேற்று நடைபெற்றது. இதன் காரணமாக விருத்தாசலத்தில் மறியல் போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் பாலக்கரையில் நடந்தது. சிஐடியு மாவட்ட துணை தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார்.

மின் ஊழியர் மத்திய அமைப்பு சங்க கோட்ட செயலாளர் ஆறுமுகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தனர். பாலக்கரையில் இருந்து பேருந்து நிலையம் நோக்கி ஜங்ஷன் சாலையில் ஊர்வலமாக சென்றனர். பின்பு ஜங்ஷன் சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 7 பெண்கள் உள்பட 87 பேரை கைது செய்தனர்.  

முஷ்ணம்: முஷ்ணத்தில் மத்திய அரசை கண்டித்து கடை வீதியில் மறியல் போராட்டம் நடந்தது. கற்பனை செல்வம், மின்வாரிய தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் கோவிந்தராசு, வட்ட செயலாளர் வெற்றிவீரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மறியல் செய்தனர்.  குறிஞ்சிப்பாடி: ஒன்றிய அரசை கண்டித்து பொது வேலை  நிறுத்தத்தில் தொழிற்சங்கத்தினர் ஈடுபட்டனர். தொமுச  மாவட்ட கவுன்சில் செயலாளர் பொன்முடி தலைமையில் மாநில துணைப் பொதுச்  செயலாளர் வேல்முருகன், சிஐடியு மாநிலக்குழு கிருஷ்ணமூர்த்தி உட்பட  நூற்றுக்கும் மேற்பட்டோர் குறிஞ்சிப்பாடி பஸ்நிலையம் எதிரில் மறியலில்  ஈடுபட்டனர். இதில், பொன்முடி,  வேல்முருகன் உள்ளிட்ட 68 பேரை போலீசார் கைது செய்தனர்.

 நெய்வேலி: நெய்வேலி மெயின்பஜாரில் இருந்து தொமுச தலைவர் திருமாவளவன், பொது செயலாளர் பாரி தலைமையில் ஏராளமான தொழிலாளர்கள் பேரணியாக புறப்பட்டனர். அவர்களை டிஎஸ்பி தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மொத்தம் 300 பேர் கைது செய்யப்பட்டனர். சிதம்பரம்: பொது வேலை நிறுத்ததால். சிதம்பரம் பகுதியில் அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை. தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு அமைப்புகள் சார்பில் சிதம்பரத்தில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது. சிதம்பரம் தலைமை தபால் நிலையம் முன்பு ஒன்று திரண்ட அந்த அமைப்பின் இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம், தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர். கஞ்சிதொட்டி முனை பகுதியில் நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை சிதம்பரம் நகர போலீசார் கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் ஏழுமலை தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டோரை கைது செய்தனர். மறியல் போராட்டம் காரணமாக அதிகளவிலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், கடலூர் மற்றும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

Related Stories: