திருவண்ணாமலையில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவில் பல்துறை பணி விளக்க கண்காட்சி-அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்

திருவண்ணாமலை :  திருவண்ணாமலையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் சுதந்திர தின விழா, சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா பல்துறை பணி விளக்க கண்காட்சியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து பார்வையிட்டார்.திருவண்ணாமலை காந்தி நகர் பகுதியில் உள்ள மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில்  75வது சுதந்திர தின விழா, சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா மற்றும் பல்துறை பணி விளக்க கண்காட்சி நேற்று நடைபெற்றது. இக்கண்காட்சியினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து பார்வையிட்டார்.

இதில், செய்தி மக்கள் தொடர்பு துறை, பொதுப்பணித்துறை, பள்ளி கல்வித்துறை, வேளாண்மை துறை, சுகாதார துறை, ஓருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 14 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த ஆண்டு உயிரிழந்த ஆரணி செய்தியாளர் சுரேஷ் ராஜாவின் குடும்பத்திற்கு முதலமைச்சர் உத்தரவின்பேரில் முதலமைச்சர் நிவாரண நிதியின் கீழ் ₹10 லட்சத்திற்கான காசோலையை அவரது மனைவி கஸ்தூரியிடம் அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

மேலும், வேளாண் பொறியியல் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ₹7.57 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த பல்துறை பணி விளக்க கண்காட்சி 7 நாட்கள் வரை நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மு.பிரதாப், எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாநில தடகள சங்க தலைவர் எ.வ.வே.கம்பன், நெடுஞ்சாலைத்துறை ேகாட்ட பொறியாளர் முரளி, நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: