வெளி மாநில பக்தர்கள் வருகை அதிகரிப்பு திருப்பதி அலிபிரியில் வாகனங்கள் அணிவகுப்பு: 1 மணி நேரம் காத்திருப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 2 வாரங்களாக தினந்தோறும் 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், வார விடுமுறை நாளான நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் தமிழகம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து திருப்பதிக்கு வந்தபடி இருந்தனர். அதனால், இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கக்கூடிய அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை, ரயில் நிலையம் பின்புறம் உள்ள கோவிந்தராஜர் சுவாமி சத்திரம் ஆகிய இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இலவச தரிசன டிக்கெட்டுகளை பெற்று சென்றனர்.

இவர்கள் அலிபிரி சோதனைச்சாவடி வழியாக திருமலைக்கு செல்ல வேண்டும். கொரோனாவுக்கு முன்பு அலிபிரி சோதனைச்சாவடியில் 120 பணியாளர்கள் இருந்து பக்தர்களின் வாகனங்கள், உடமைகளை சோதனை செய்து அனுமதித்தனர். தற்போது, இங்கு  ஊழியர்கள் குறைவாக உள்ளதால், இந்த பணியில் தாமதம் ஏற்படுகிறது. வழக்கமாக 6,000 முதல் 8,000 வாகனங்களில் பக்தர்கள் திருமலைக்கு செல்வார்கள். வார விடுமுறை நாட்களில் தற்பொழுது 8,000 முதல் 12,000 வாகனங்களில் பக்தர்கள் திருமலைக்கு வந்தபடி உள்ளனர்.  

இதனால், அலிபிரி சோதனைச்சாவடியில் வாகனங்கள் மற்றும் உடைமைகள் சோதனை செய்து திருமலைக்கு செல்வதற்கு ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், திருமலையில் 7 ஆயிரம் அறைகள் உள்ளது. அதில், 50 சதவீதம் அறைகள் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், அறைகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் திருப்பதியிலேயே  தங்கி தங்களுக்கு வழங்கப்பட்ட டிக்கெட்டில் உள்ள நேரத்தில் திருமலைக்கு வந்து தரிசனம் செய்து கொள்ள வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

Related Stories: