1 டன் ரேஷன் அரிசி கடத்தல்: ஆசாமி கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கள்ள சந்தையில் விற்க முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல் காஞ்சிபுரம் மார்ச் 27: காஞ்சிபுரம் அருகே படுநெல்லி கிராமத்தில், 1.05 டன் ரேஷன் அரிசியை, போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஆசாமியை கைது செய்தனர். காஞ்சிபுரம் அருகே படுநெல்லி கிராமம் பெருமாள் கோயில் பின்புறம் ரேஷன் அரிசி கடத்த படுவதாக காஞ்சிபுரம் குடிமைப்பொருள் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குடிமைப்பொருள் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில் போலீசார், நேற்று சம்பவ இடத்துக்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, வெட்டவெளியில் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதன் அருகில், ஒரு ஆசாமி இருப்பதை கண்டனர்.

போலீசாரை கண்டதும், ஆசாமி அங்கிருந்து தப்பியோட முயன்றார். உடனே போலீசார், அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர், மூட்டைகளை சோதனை செய்தபோது, ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. இதையடுத்து தலா 50 கிலோ கொண்ட 21 அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த ராமசாமி (48) என தெரிந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரேஷன் அரிசியை கடத்தி வந்தது யார், எங்கு கடத்தி செல்ல இருந்தனர், இதில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Related Stories: