2016ம் தேர்தலில் பொய் புகார் கூறியதாக ஹிலாரி கிளிண்டன் மீது டொனால்ட் டிரம்ப் வழக்கு : ரூ.5000 கோடி இழப்பீடு வழங்க மனுவில் கோரிக்கை!!

வாஷிங்டன் : ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்ததாக தன் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறியதாக ஹிலாரி கிளிண்டன் மற்றும் ஜனநாயக கட்சி தலைவர்கள் மீது அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்காவின் பிளோரிடா மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் டிரம்ப் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது, ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்ததாக கூறி தனக்கு எதிராக ஹிலாரி கிளின்டன் பிரச்சாரம் செய்ததாக மனுவில் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.ஜனநாயக கட்சி தலைவர்கள் சிலரும் இதே குற்றச்சாட்டை கூறியிருப்பதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

தன்னை இழிவுபடுத்துவது என்ற ஒன்றை சுயநல நோக்கத்துடன் அவர்கள் ஒன்றாக செயல்பட்டதாக மனுவில் டிரம்ப் தெரிவித்துள்ளார். பொய்யான ஆவணங்களை திரட்டியது, சட்ட அமலாக்கத்தை ஏமாற்றியது உள்ளிட்ட பிரிவுகளில் ஹிலாரி மற்றும் ஜனநாயக கட்சி தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் டிரம்ப் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. பொய் குற்றச்சாட்டின் எதிரொலியாக தனக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்காக 5000 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடுமாறு மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் மனுவை புளோரிடா நீதிமன்றம் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளது.  

Related Stories: