கர்நாடக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்க வேண்டும்: காங்கிரஸ், மஜத கட்சிகள் ஆதரவு

பெங்களூரு: மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்ற தீர்மானத்துக்கு போட்டியாக, கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதை எதிர்த்து, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதை கண்டிக்கும் வகையிலும், இந்த அணையை கட்டுவதற்கான அனுமதியை வழங்கும்படி ஒன்றிய அரசை வலியுறுத்தியும், கர்நாடகா சட்டப்பேரவையில் இம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய அவர், மேகதாது குடிநீர் திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி இருப்பது, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. ஒன்றிய நீர் ஆணையம் மற்றும் சுற்றுச்சூழல், வனத்துறை மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு உடனடியாக அனுமதி தரவேண்டும் என இந்த தீர்மானம் ஒரு மனதாக வலியுறுத்துகிறது. அது போல், கோதாவரி- கிருஷ்ணா-பெண்ணாறு- வைகை- குண்டலாறு இணைப்பு திட்டத்தில் கர்நாடகாவுக்கான நீரின் பயன்பாடு எவ்வளவு என்பதை உறுதி செய்த பிறகே விரிவான அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். இந்த தீர்மானத்துக்கு அனைத்து கட்சிகளும் ஒரு மனதாக ஆதரவு அளிக்க வேண்டும்’ என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மஜத.வின் எச்டி ரேவண்ணா உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களும் இந்த தீர்மானத்தை ஆதரிப்பதாக ஒரே குரலில் கூறினர். இதைத் தொடர்ந்து, இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் காகேரி அறிவித்தார்.

Related Stories: