ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரியில் அதிகாலை நடைபெற்ற பொன்காளியம்மன் கோயில் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப்பந்தம் ஏந்தி சுவாமி தரிசனம் செய்தனர். தலையநல்லூரில் உள்ள பொன்காளியம்மன் கோயிலின் பங்குனி தேர் திருவிழா கடந்த 15-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மற்றும் தீப்பந்த வழிபாடு வெகு விமர்சியாக நடைபெற்றது.
இதில் மலர் அலங்காரத்தில் தாரை தப்பட்டையுடன் அதிர்வேட்டுகள் முழங்க பல்லக்கு தேரில் அம்மன், பக்கதர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது ஆயிரக்கணக்கானோர் எண்ணெயில் நனைத்து தயாராக கொண்டு வந்திருந்த தீப்பந்தங்களை கொளுத்தி, அவற்றை கைகளில் உயர்த்தி பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், சேலம் உட்பட அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாங்கள் குடும்பத்துடன் இரவு முழுவதும் கண்விழித்து பங்கேற்றனர்.