தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சியில் இருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) பேசுகையில், “தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு சுங்கச்சாவடிகள் இருக்கிறது. அவை அனைத்தையும் அகற்ற வேண்டும்” என்றார்.இதற்கு பதில் அளித்து நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:கடந்த வாரம் ஒன்றிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தோம். ஏற்கனவே, தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சியில் இருக்கின்ற சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை வலியுறுத்தி இப்போதும் சென்று, நகராட்சி, மாநகராட்சிகளில் சுங்கச்சாவடிகள் இருக்கக்கூடாது என்று விதி இருக்கிறது.

அந்த விதியை பயன்படுத்தி அவற்றை எல்லாம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். குறிப்பாக, 5 சுங்கச்சாவடிகளை கொடுத்து இவற்றை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். தமிழகத்தில் உள்ள நகராட்சி இயக்குனர், செயலாளரை அழைத்து பேசி நாங்கள் பாசிட்டிவான பதில் சொல்கிறோம் என்று சொல்லியிருக்கிறார். எனவே, அது விரைவில்  நடைமுறைப்படுத்தப்படும் என்று நாங்களும் எதிர்ப்பார்க்கிறோம்.

Related Stories: