மகளிர் உலக கோப்பையில் 110 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா: அரை இறுதி வாய்ப்பு தக்கவைப்பு

ஹாமில்டன்: ஐசிசி மகளிர் கோப்பை தொடரில் வங்கதேசத்தை 110 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்தது.செடான் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/இரவு), டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. தொடக்க வீராங்கனைகள் மந்தனா, ஷபாலி இருவரும் முதல் விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்தனர். மந்தனா 30, ஷபாலி 42 ரன் எடுத்து வெளியேற, கேப்டன் மிதாலி சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டானார். இந்தியா 15.4 ஓவரில் 74 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து திடீர் சரிவை சந்தித்தது.அடுத்து வந்த ஹர்மன்பிரீத் 14 ரன்னில்  வெளியேறினார்.  ரிச்சா 26 ரன் குவித்து ஸ்கோர் உயர உதவினார். பொறுப்புடன் விளையாடி அரைசதம் விளாசிய  யாஷ்டிகா 50 ரன்னில் (80 பந்து, 2 பவுண்டரி) ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் ஸ்நேஹ் ராணா 23 பந்தில் 27 ரன் விளாசி பெவிலியன் திரும்பினார். இந்தியா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன் எடுத்தது. பூஜா வஸ்த்ராகர் 30 ரன் (33 பந்து, 2 பவுண்டரி), ஜுலன் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேசம்  தரப்பில் ரிது மோனி 3, நஹிதா 2, ஜஹனாரா ஒரு விக்கெட் எடுத்தனர்

இதையடுத்து 230 ரன்  எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம், இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 40.3 ஓவரில் 119 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சல்மா 32 ரன்,   லதா மொண்டல் 24, முர்ஷிதா 19, ரிது 16 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் ஸ்நேஹ் ராணா 10 ஓவரில் 2 மெய்டன் உள்பட 30 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். ஜுலன், பூஜா  தலா 2 விக்கெட்,  ராஜேஸ்வரி, பூனம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.  

இந்தியா 110 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது. சிறந்த வீராங்கனையாக யாஷ்டிகா தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம்  புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு இந்தியா  முன்னேறியுள்ளது. தனது கடைசி லீக் ஆட்டத்தில் மார்ச் 27ம் தேதி  தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா, பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Related Stories: