ஒரே நேரத்தில் 2 மாணவிகளை கடத்தி பலாத்காரம் செய்த மன்மத ஆசிரியர்: திருப்பதியில் குடித்தனம் நடத்தியபோது சிக்கினார்

கோவை: கோவை மற்றும் கன்னியாகுமரியை சேர்ந்த 2 மாணவிகளை ஒரே நேரத்தில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த மன்மத ஆசிரியர், திருப்பதியில் குடித்தனம் நடத்தியபோது சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர். சேலம் ஆத்தூர் தெடாவூரை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் மணிமாறன் (40). அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் திருமணம் செய்து முதல் மனைவியை பிரிந்தார். 2வதாக பூர்ணிமா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவர் பல்வேறு புகார்களின் அடிப்படையில் பணியில் இருந்து கடந்த 2019ல் நிரந்தரமாக நீக்கப்பட்டார். பின்னர் இவர் ஏ டூ இசட் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பணத்தை வசூலித்தார். பணத்தை திருப்பி தராமல் இருந்த இவர் 2வது மனைவி, குழந்தைகளை விட்டு விட்டு தலைமறைவானார். பின்னர் இவர் கடந்த ஆண்டு கோவை சரவணம்பட்டிக்கு வந்தார். டியூசன் ஆசிரியர் என சொல்லி வாடகை வீட்டில் வசித்து வந்தார். வீட்டின் மாடியில் டியூசன் நடத்தி வந்தார். நடனம் மற்றும் மேஜிக் பயிற்சியும் அளித்து வந்துள்ளதாக தெரிகிறது. அப்போது அதே பகுதியை சேர்ந்த கணக்கு படிக்க வந்த 16 வயதான 10ம் வகுப்பு மாணவிக்கு பாடம் சொல்லி கொடுத்தார். மாணவியின் குடும்பத்தினரிடமும் நட்பாக பழகினார். கடந்த ஆண்டு ஜூலை 30ம் தேதி மாணவியுடன் மாயமானார்.

 இது குறித்து சிறுமியின் பெற்றோர் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து மணிமாறனை தேடி வந்தனர். ஆனால் அவர் குறித்த எந்த துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து கோவை மாநகர போலீசார் அவரின் போட்டோவுடன் நோட்டீஸ் அச்சடித்து தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பினர். பழனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோட்டீஸ் வழங்கி தேடுதல் பணி நடத்தினர். இதற்கிடையே மாணவியை மணிமாறன் கொடைக்கானல், புதுச்சேரி, ராமநாதபுரம், திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது. கடந்த ஜனவரி மாதம் இவர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றார். சுசீந்திரத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். அப்போது கல்லூரியில் முதல் ஆண்டு படித்து வந்த வீட்டின் உரிமையாளரின் மகளுடன் நட்பாக  பழகினார். அவரிடம் செல்போன் எண் வாங்கி பேசி அவரையும் தனது மன்மத வலையில் வீழ்த்தினார். இங்கே நிம்மதியாக வாழ முடியாது எனக்கூறி 2 மாணவிகளையும் அழைத்து கொண்டு திருப்பதி சென்றார்.

அங்கே வாடகை வீட்டில் மாணவிகளுடன் குடும்பமே நடத்தி வந்துள்ளார். வருமானத்துக்காக சிறிய டீ கடை ஆரம்பித்தார். தன்னிடம் டீ குடிக்க ஆள் வராத நிலையில் மாணவிகள் 2 பேரிடமும் கேனில் டீ நிரப்பி கொடுத்து அதை விற்று வருமாறு அனுப்பினார். இதில் கிடைத்த பணத்தை வைத்து ஜாலியாக செலவு செய்து வந்தார். இந்நிலையில், மணிமாறன் திருப்பதியில் இருக்கும் தகவல் சுசீந்திரம் போலீசாருக்கு கிடைத்தது. அவர்கள் கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கமிஷனர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில், சரவணம்பட்டி போலீசார் அங்கே சென்று மணிமாறனை சுற்றிவளைத்து பிடித்தனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் கோவை அழைத்து வரப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மாணவிகளை கடத்தியது, சிறார் பாலியல் பலாத்காரம் செய்தது (போக்சோ சட்டம்) உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து மணிமாறனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மாணவிகளை இவர் ஆபாசமாக போட்டோ, வீடியோ ஏதாவது எடுத்திருக்கிறாரா? என்றும் ஆய்வு செய்தனர்.

மணிமாறன் அளித்த வாக்குமூலத்தில், ‘‘நான் கோவை கோவில்பாளையத்தில் முதலில் தங்கியிருந்தேன். அப்போது 16 வயது மாணவியின் பெற்றோர் வீட்டில் டியூசன் சென்டர் நடத்த ஆசிரியர் தேவை என அறிவிப்பு கொடுத்திருந்தனர். அவர்களிடம் அன்பாக பேசினேன். அவர்கள் என்னை நம்பி டியூசன் சென்டரை ஒப்படைத்தனர். சில நாட்களில் அவர்களது மகளை நான் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி மடக்கி பல இடங்களுக்கு அழைத்து சென்று சுற்றி காட்டினேன். இதில் என் வலையில் விழுந்துவிட்டாள். அதேபோல சுசீந்திரம் சென்று 19 வயது மாணவியையும் காதல் வலைவிரித்து அழைத்து சென்றேன். இப்போது போலீஸ் வலையில் நானே சிக்கி விட்டேன்’’ என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசிடம் பிடிபட்டது எப்படி?

திருப்பதி சென்றுவிட்டதால் யாரும் பிடிக்க முடியாது. அங்கு மாணவிகளை வைத்து பெரிய பேக்கரி வைக்கலாம் என திட்டமிட்டுள்ளார். ஆனால் மாணவிகளிடம் சைக்கிளில் டீ கேன் கொடுத்து விற்க வைத்தபோது, கல்லூரி மாணவியான நான் டீ விற்பதா? என்று எண்ணிய 19 வயது மாணவி, சுசீந்திரத்தில் வசிக்கும் கல்லூரி நண்பனை தொடர்பு கொண்டு, ‘‘ஒரு கெட்ட நபரை நம்பி ஏமாந்து விட்டேன். என் வாழ்க்கை இப்படி ஆகி விட்டது’’ என கதறியுள்ளார். 16 வயது மாணவியிடமும் ‘‘நாம் வசமாக இவரிடம் மாட்டி கொண்டோம்.  போலீஸ் வரும் வரை அமைதியாக இருக்க வேண்டும். இப்போது தப்ப நினைத்தால்  நம்மை ஏதாவது செய்து விடுவார்’’ எனக்கூறியுள்ளார். பின்னர் தனது நண்பர் கூறியபடி இருப்பிட  விவரங்களை குகூள் மேப் மூலம் பெற்றோருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதை வைத்தே  போலீசார் அங்கே சென்று மணிமாறனை மடக்கியுள்ளனர்.  8 மாத தேடலுக்கு பின்னர் மாணவிகள்  பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.

Related Stories: