திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம் : திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

திருப்பரங்குன்றம்: முருக பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி திருவிழா, வைகாசி விசாகம், கந்த சஷ்டி விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த விழாக்களில் மிகவும் முக்கியமானது பங்குனி திருவிழாவாகும். இந்தாண்டு பங்குனி திருவிழா கடந்த மார்ச் 8ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 8ம் தேதி துவங்கிய விழா நாளை (மார்ச் 23) நிறைவடைகிறது. விழா நாட்களில் தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் பூத வாகனம், அன்னவாகனம், தங்கமயில் வாகனம், பச்சை குதிரை வாகனம், தங்க குதிரை வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

நேற்றுமுன் தினம் பட்டாபிஷேகம், நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதுரையிலிருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் கலந்து கொண்டார்.

முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று காலை 6.27 மணிக்கு கோயில் நிலையில் இருந்து ‘அரோகரா கோஷத்துடன்’ பக்தர்கள் வடம் பிடிக்க துவங்கியது. தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஊர்வலமாக 3 கிலோ மீட்டர் நீளமுள்ள கிரிவல பாதையை சுற்றி வந்து கோயில் நிலையை அடைந்தது.

திருப்பரங்குன்றம் சுற்று வட்டார கிராம மக்கள் உட்பட மதுரை மற்றும் வெளியூர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கிரிவல பாதை வழியாக தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர்.

தேரோட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பங்குனி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: