வெளிநாடுகளில் கொரோனா அதிகரிப்பு அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி: ஒன்றிய அரசு பரிசீலனை

புதுடெல்லி: இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது. நாட்டில் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு மட்டும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டு கடந்த 16ம் தேதி முதல் 60 வயது மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வதற்கு தகுதியானர்கள் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டு 9 மாதங்கள் முதல் 39 வாரங்கள் இடைவெளியில் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளலாம். இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகின்றது. உலக நாடுகள் சிலவற்றில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பதற்கு தொடங்கி உள்ளது. மேலும் சர்வதேச நாடுகளுக்கு செல்லும் பயணிகள் சிரமங்களை எதிர்கொள்ளும் சூழல் உருவாகி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அனைவருக்கும் பூஸ்டர் செலுத்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.

புதிய தொற்று 1,549

* கடந்த 24 மணி நேரத்தில் 1,549 பேருக்கு புதிதாக தொற்று பாதித்ததைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,09,390 ஆக உள்ளது.

* நேற்று ஒரே நாளில் 31 பேர் இறந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 5,16,510 ஆக இருக்கிறது.

* சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 25,016 ஆகும்.

* இதுவரை 181.24 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories: