சுமைகளில் இருந்து விடுபட்டுவிட்டார்; இனி எதிரணிகளுக்கு கோஹ்லி டேஞ்சர்தான்.! மேக்ஸ்வெல் சொல்கிறார்

மும்பை:ஆர்சிபி அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிளைன் மேக்ஸ்வெல் முன்னாள் கேப்டன் கோஹ்லி குறித்து கூறியதாவது:- விராட் கோஹ்லிக்கு கேப்டன் பதவி என்பது நிச்சயம் மிகப்பெரிய சுமையாக இருந்திருக்கும். அந்த சுமையே அவரது ஆட்டத்திறனில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் இப்போது அதிலிருந்து அவர் விடுபட்டு விட்டார். இது எதிரணிகளுக்கு அபாயகரமானதாகதான் இருக்கும். கொஞ்சம் ரிலாக்சாக இருப்பது அவருக்கு அற்புதமான, தேவையான ஒன்று. அடுத்த சில ஆண்டுகளில் அவர் எந்தவித நெருக்கடியும் இன்றி அனுபவித்து உற்சாகமாக விளையாட முடியும்.

ஆரம்ப காலங்களில் அவருக்கு எதிராக விளையாடியபோது ஆக்ரோஷமான எதிராளியாக தென்படுவார். எப்போதும் ஆட்டத்தை தனக்குள் எடுத்துக் கொண்டு விளையாட முயற்சிப்பார். ஆனால், இந்த ஆண்டில் இதுவரை விளையாடிய சர்வதேச ஆட்டங்களில், அவர் தமது உணர்வுகளை கட்டுப்படுத்தி கொண்டதை பார்க்க முடிந்தது. முடிவுகளை எடுப்பதிலும் அவர் கட்டுக்கோப்புடன் செயல்படுவதை பார்க்கும்போது உண்மையிலேயே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கோஹ்லியை பொறுத்தவரை அவருக்கு எதிராக ஆடும்போது அவரது முகபாவம் உணர்வுபூர்வமாக என்னை பரவசப்படுத்தும். அதே சமயம் இணைந்து ஆடும்போது அவருடனான உரையாடல்கள் உண்மையிலேயே நன்றாக, மகிழ்ச்சியாக உற்சாகம் தரக்கூடியதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: