ஆண்டிபட்டி அருகே கல்லூரி மாணவி மர்மச்சாவு-இறப்பில் மர்மம் என உறவினர்கள் மறியல்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே, கல்லூரி மாணவி மர்மச்சாவில் உரிய விசாரணை கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள டி.பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பவுன்ராஜ் மகள் அனுரத்திகா நிதி (20), தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் அதிகாலை தோட்டத்திற்கு செல்வதாக கூறிவிட்டு, வீட்டை விட்டு சென்றவர் மாலை வரை திரும்பவில்லை.

அதிர்ச்சியடைந்த தேடிய போது, தோட்டத்தில் உள்ள வீட்டின் கதவு உட்புறம் பூட்டிய நிலையில், உள்ளே அனுரத்திகா நிதி தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். புகாரின் பேரில் ஆண்டிபட்டி போலீசார் மாணவி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவி சாவில் மர்மம் உள்ளதாக கூறி டி.பொம்மிநாயக்கன்பட்டி கிராம மக்கள் நேற்று காலை தேனி - மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தேனி மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரே தலைமையிலான போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன், புகார் குறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

இதனால், தேனி - மதுரை சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்நிலையில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனையில் செய்யும் அறைக்கு சென்ற உறவினர்கள், அங்கு போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். அதை தொடர்ந்து க.விலக்கு பகுதியில் மறியலில் ஈடுபட சென்றனர். இதையடுத்து, எஸ்பி அவர்களுடன் மீணணடும் பேச்சுவார்த்தை நடத்தினார். இறந்த மாணவி உறவினர்கள் முன்பே விசாரணை நடத்துகிறோம்.

அதன் பிறகு நீங்கள் உடலை வாங்கி செல்லுங்கள் என்று தெரிவித்தார். இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் இருந்த கூட்டத்தை கலைத்து விட்டு போலீசார் வாகனத்தில், மாணவியின் உறவினர்களை ஏற்றி டி.பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். கிராமத்திற்கு சென்ற உறவினர்கள் தேனி - மதுரை சாலையில் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். எஸ்பி தலைமையிலான போலீசார் மாணவி தூக்கிட்டு இறந்த இடத்திற்கு மாலையில் சென்று பார்த்து விசாரணை நடத்தினார். ஆண்டிபட்டி போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் உறவினர்கள் தொடர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: