கேரளாவில் மலப்புரம் அருகே கால்பந்து மைதானத்தில் கேலரி சரிந்து விபத்து: 100க்கும் மேற்பட்ட ரசிகர்கள் படுகாயம்

திருவனந்தபுரம் : கேரளாவில் கால்பந்து போட்டியின்போது கேலரி  சரிந்து விழுந்து 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  இதில் 15 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கேரள  மாநிலம், மலப்புரம் அருகே உள்ள வண்டூர் பூங்கோடு மைதானத்தில், செவன்ஸ்  என்று அழைக்கப்படும் 7 வீரர்கள் மட்டும் கலந்து கொள்ளும் கால்பந்து போட்டி  நடைபெற்றது. போட்டியை  காண 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் மைதானத்தில் தற்காலிக கேலரி அமைக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோழிக்கோடு,  நெல்லிக்குத்து ஆகிய அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நடைபெற்றது. இறுதிப் போட்டி என்பதால்  போட்டியை பார்ப்பதற்காக அந்த  பகுதியை சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் மைதானத்தில் குவிந்திருந்தனர்.  போட்டி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கேலரி சரிந்து விழுந்தது. இதில் ரசிகர்கள் ஒருவர் மீது ஒருவர்  விழுந்தனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் 15 பேர் நிலைமை கவலைக் கிடமாக நிலையில் இருப்பதாக  கூறப்படுகிறது.  இந்த சம்பவம் குறித்து  வண்டூர் போலீசார் விசாரித்தனர். இதில் பார்வையாளர் கேலரியில் அளவுக்கு அதிகமாக ரசிகர்களை அனுமதித்ததால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

Related Stories: