கோவையில் கேட்டை உடைத்து போலீஸ் நிலையத்துக்குள் நுழைய முயன்ற காட்டு யானை

கோவை: கோவையில் கேட்டை உடைத்து போலீஸ் நிலையத்துக்குள் காட்டு யானை நுழைய முயன்ற சம்பவம் நடந்துள்ளது. கோவை சிறுவாணி ரோட்டில் காருண்யா போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணிகள் நடந்துகொண்டிருந்தது. 2 போலீசார் வாகனத்தில்  ரோந்து சென்றுவிட்டனர். போலீஸ் நிலையத்தில் ஒரு பெண் போலீஸ் ஒருவர் பணியில் இருந்தார்.

நள்ளிரவில் கேட் பகுதியில் சத்தம் கேட்டது. அவர் வெளியே சென்று பார்த்தார்.அப்போது காட்டு யானை ஒன்று போலீஸ் நிலைய கேட்டை தும்பிக்கையால் இழுத்து உடைத்து உள்ளே நுழைய முயன்று கொண்டிருந்தது. பெண் போலீஸ் அதிர்ச்சியடைந்து போலீஸ் நிலையத்தின் கதவை உள்புறமாக தாழிட்டார். இது தொடர்பாக அவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் அங்கே வந்து யானையை விரட்ட முயன்றனர்.

ஆனால் சில நிமிட நேரம் போலீஸ் நிலைய வளாகத்தில் சுற்றியபடி நடமாடிய யானை பின்னர் காட்டை நோக்கி சென்றது. சில நாட்களாக இந்த யானை கோவை குற்றால அடிவாரத்தில் சுற்றியதாக தெரிகிறது. சாடி வயல்,  பொட்டப்பதி, வெள்ளப்பதியிலும் இந்த யானை சென்று வந்துள்ளது. கூட்டத்தில் சேராமல் தனியாக சுற்றும் இந்த யானை இரவில் அடிக்கடி வனப்பகுதி ரோட்டில் வலம் வருவதாக தெரிகிறது.

சில நாட்களுக்கு முன் இந்த யானை சிறுவாணி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செல்லும் ரோட்டில் வாகனங்களை மறித்து விரட்டியது. யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் காருண்யா நகர் போலீஸ் நிலைய வளாகத்திற்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.

Related Stories: