ராமஜெயம் கொலை வழக்கு: 5 மாவட்ட கைதிகளிடம் தீவிர விசாரணை

திருச்சி: திருச்சியில் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவினர் 5 மாவட்ட சிறைகளில் சந்தேகத்துக்கிடமான கைதிகளிடம் விசாரணை நடத்தி உள்ளனர். தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், தொழிலதிபருமான ராமஜெயம் திருச்சியில் கடந்த 2012 மார்ச் 29ம் தேதி அதிகாலை வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். முதலில் சிபிசிஐடி விசாரித்த இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் சிபிஐக்கு மாற்றப்பட்டது. 4 ஆண்டுகள் சிபிஐ தரப்பில் மேற்கொண்ட விசாரணையிலும் துப்பு கிடைக்கவில்லை.

இதனால் ராமஜெயத்தின் சகோதரர் ரவிசந்திரன் தொடர்ந்த வழக்கில், சென்னை ஐகோர்ட் நீதிபதி பாரதிதாசன், ராமஜெயம் கொலை வழக்கை கோர்ட் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டார். அதன்படி தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், அரியலூர் டிஎஸ்பி மதன், சிபிஐ டிஎஸ்பி ரவி ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவை சிபிசிஐடி டிஜிபி ஷகீல்அக்தர் மேற்பார்வை செய்ய வேண்டும். மேலும், இந்த குழுவினர் 15 நாட்களுக்கு ஒருமுறை வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் திருச்சியில் விசாரணையை தொடங்கி உள்ளனர்.  

இதுகுறித்து எஸ்பி ஜெயக்குமார் அளித்த பேட்டி: ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் புதிய கோணத்தில் விசாரணையை தொடங்கி உள்ளோம். இதற்காக 45 பேர் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் போலீஸ் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், கடலூர், புதுச்சேரி, சென்னை, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சிறைச்சாலைகளில் சந்தேகத்துக்கிடமான கைதிகளிடமும் விசாரணை நடத்தியுள்ளோம் என்றார். இதனிடையே ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும். அவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று சிறப்பு புலனாய்வு குழு அறிவித்துள்ளது.

Related Stories: