சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டிய பைன் பாரஸ்ட்

ஊட்டி: ஊட்டி - கூடலூர் சாலையில் அமைந்துள்ள பைன் பாரஸ்ட் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் ஊட்டி நகருக்கு வெளியில் அமைந்துள்ளன. குறிப்பாக சூட்டிங்மட்டம், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைன் பாரஸ்ட், கேர்ன்ஹில், அவலாஞ்சி உள்ளிட்டவை ஆகும். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் நகரில் உள்ள பூங்காக்கள், படகு இல்லங்கள் மட்டுமின்றி நகருக்கு வெளியில் அமைந்துள்ள இதுபோன்ற சுற்றுலா தலங்களை காண ஆர்வம் காட்டுவார்கள்.

தற்போது, கொரோனா தொற்று பரவல் கணிசமாக குறைந்துள்ள நிலையில், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.குறிப்பாக கேரளா, கர்நாடகாவில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை புரிந்து இங்குள்ள சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர். இந்நிலையில், வார விடுமுறையை கொண்டாட நேற்று முதலே ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வர துவங்கினர். குறிப்பாக, கூடலூர் வழியாக ஊட்டிக்கு வரும் கேரளா, கர்நாடகா சுற்றுலா பயணிகள் பைன் பாரஸ்ட் பகுதியை பார்வையிட ஆர்வம் காட்டினர். பைன் மரங்களுக்கு நடுவே நடந்து சென்று காமராஜர் சாகர் அணை பார்த்து ரசிப்பதுடன், அங்கு குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர்.

Related Stories: