தமிழக பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக திருப்பதியில் ‘யாத்ரி நிவாஸ்’ கட்ட நடவடிக்கை-எம்எல்ஏ நந்தகுமார் தகவல்

வேலூர் : திருப்பதியில் தமிழக பக்தர்கள் தங்குவதற்காக ‘யாத்ரி நிவாஸ்’ அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறங்காவலர் குழு உறுப்பினரான நந்தகுமார் எம்எல்ஏ தெரிவித்தார்.

வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் அணைக்கட்டு எம்.எல்.ஏ.வுமான ஏ.பி.நந்தகுமார், திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுவில் உறுப்பினராக உள்ளார். இவர் தனது சொந்த செலவில் வேலூரில் இருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களை இலவசமாக அழைத்து செல்லும் வகையில் தினசரி வாகன சேவைக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இதன் முதல் பயணம் கடந்த மாதம் பள்ளிகொண்டா ரங்கநாதர் கோயிலில் இருந்து தொடங்கியது. இந்நிலையில் முழுவதும் தனது சொந்த செலவில் 12 பக்தர்களை நேற்று வேனில் திருப்பதிக்கு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் அனுப்பி வைத்தார். இந்த வேன் வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. பின்னர் எம்எல்ஏ நந்தகுமார் கூறியதாவது:

திருப்பதி- திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக தமிழக முதல்வரால் நியமிக்கப்பட்டுள்ளேன். எனது பதவிக்காலம் இன்னும் 19 மாதங்களுக்கு உள்ளது.

அதுவரை வாரத்துக்கு 6 நாட்கள் என திருமலைக்கு பக்தர்கள் இலவச தரிசனம் செய்து திரும்ப எனது சொந்த செலவில் ஏற்பாடு செய்துள்ளேன். இதற்காக 12 பேர் பயணம் செய்யும் வேனை புதிதாக வாங்கியுள்ளேன். திருப்பதி கோயிலில் ஒரு நபர் மூலம் வேலூரில் இருந்து செல்லும் பக்தர்களை அழைத்துச்சென்று சுவாமி தரிசனம் செய்து, பிற்பகல் திருமலை அன்னதான கூடத்தில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்படும். ஒரு குடும்பத்தில் 3 அல்லது 4 பேர் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்படும். இலவச தரிசன சேவைக்காக மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் முன்கூட்டியே ஆதார் விவரங்களை அளித்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.

₹300 டிக்கெட்டில் ஏழுமலையானை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

திருப்பதியில் தமிழக பக்தர்கள் தங்குவதற்கு ஏதுவாக ‘யாத்ரி நிவாஸ்’ கட்டுவதற்கு முதல்வர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாபு, வேலூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

Related Stories: