சரவெடி தயாரிக்க தடை விதிப்பு எதிரொலி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் 21 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்: டாப்மா சங்கம் அறிவிப்பு

சிவகாசி: பட்டாசு ஆலைகளில் சரவெடி தயாரிக்க தடை விதித்ததை தொடர்ந்து, மார்ச் 21 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை டாப்மா சங்கத்தினர் அறிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. ஆலைகளில் நேரடியாக 5 லட்சம், மறைமுகமாக 3 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி வரை பட்டாசு வர்த்தகம் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை முடிந்து அடுத்த ஆண்டுக்கான உற்பத்தி பணிகள் 10 நாட்களில் துவங்கி விடும். இந்தாண்டு பட்டாசு ஆலைகளில் சரவெடி, பேரியம் நைட்ரேட் கெமிக்கல் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதனிடையே ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள், பட்டாசு ஆலைகளில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியே பட்டாசு தயாரிக்க வேண்டும், தடையை மீறும் பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என உத்தரவிட்டனர். மேலும், 20க்கும் மேற்பட்ட ஆலைகளின் உரிமத்தையும் தற்காலிகமாக ரத்து செய்தனர். இதை கண்டித்து வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள 110 பட்டாசு ஆலைகளின் கூட்டமைப்பான  தமிழன் பட்டாசு மற்றும் கேப்  உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் (டாப்மா) மார்ச் 21 முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

Related Stories: