திருவண்ணாமலை அருகே விடுதி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வார்டன் கைது

சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த பத்தியாவரம் பகுதியில் அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்குள்ள ‘‘அன்பு இல்லம்’’ என்ற விடுதியில் 112 மாணவர்கள் தங்கி  படித்து வருகின்றனர். இங்கு வார்டனாக கடந்த 2 ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டம், அடைக்கலபுரத்தை சேர்ந்த துரைபாண்டியன்(32) உள்ளார். இவருக்கு மனைவியும் 3 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக துரைபாண்டியன் மாணவர்களை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியுள்ளார். 8க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது தொல்லை தாங்க முடியாத மாணவர்கள் இதுகுறித்து சைல்டு லைன் ‘‘1098’’ என்ற எண்ணுக்கு நேற்று முன்தினம் தகவல் அளித்தனர்.

தகவலறிந்து திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ், விசாரணை நடத்தும்படி எஸ்பி பவன்குமாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சேத்துப்பட்டு போலீசார் விடுதிக்கு சென்று, துரைபாண்டியனை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர் ஓரினச்சேர்க்கைக்கு மாணவர்களை மிரட்டி வந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். திருவண்ணாமலை சைல்டு லைன் அலுவலர் பாலாஜி புகாரின்படி சேத்துப்பட்டு போலீசார் போக்சோ சட்டம் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து  வார்டன் துரைபாண்டியனை நேற்று கைது செய்தனர்.

Related Stories: