கொள்ளிடம் அருகே வடரங்கத்தில் விரிசல் விழுந்து சேதமடைந்த ஊராட்சி அலுவலக கட்டிடம்-இடித்து அகற்றி புதிதாக கட்ட மக்கள் கோரிக்கை

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் விரிசல் விழுந்து சேதமடைந்த நிலையில் உள்ள பழமையான ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றி புதிதாக கட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் உள்ளது. 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள இந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர்களில் விரிசல் விழுந்தும், கட்டிடத்தின் மேற்கூரை உடைந்து எந்த நேரமும் கீழே விழும் நிலையில் உள்ளது. கட்டிடத்தின் உள் பகுதியின் மேற்கூரை உள்பகுதியில் சிமெண்ட் காரை பெயர்ந்து கீழே விழுந்துள்ளது.

மழை பெய்தால் மேற்கூரையின் வழியே தண்ணீர் உள்ளே புகுவதால் உள்ளே அமர்ந்து பணியாற்ற முடியாத நிலை உள்ளது. ஊராட்சிக்கு சொந்தமான பலவகையான பதிவேடுகளை இந்த கட்டிடத்திற்குள் வைத்து பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில்தான் ஊராட்சிக்கான அனைத்து வகையான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த கட்டிடம் திடீரென இடிந்து விழும் நிலையில் உள்ளதால் உடனடியாக கட்டிடத்தை முன்கூட்டியே விபத்து ஏற்படுவதற்கு முன்பாக இடித்து அகற்றிவிட்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: