கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் சுற்றுப்புற கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை: புதுப்பட்டினம் ஊராட்சியில் சிறப்பு தீர்மானம்

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என புதுப்பட்டினம் ஊராட்சியில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் புதுப்பட்டினம் ஊராட்சி தலைவர் காயத்ரி தனபால் தலைமையில் நேற்று சிறப்பு கூட்டம் நடந்து. கூட்டத்தில், புதுப்பட்டினம் ஊராட்சி மற்றும் பல்வேறு கிராமங்களில் அணுமின் நிலைய நிர்வாகம் பொது அறிவிப்புகள் ஏதும் வெளியிடாமல், மக்களின் கருத்துக்களை கேட்காமல் ‘நிலா’ கமிட்டி என்ற பெயரில் நிலங்களை விற்க தடை விதித்துள்ளது. இதனால், பொதுமக்கள் பொருளாதாரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, நிலா கமிட்டி மூலம் எல்லையை விலக்களிக்க அல்லது நிலா கமிட்டியை முழுவதும் ரத்து செய்ய வேண்டும். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கல்வி தகுதியின் அடிப்படையில் உள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அணுமின் நிலைய வேலை வாய்ப்பு சம்பந்தமான கேள்விகள், இந்தியில் இடம் பெறுவதால் தமிழக மக்களுக்கு இந்த வேலை வாய்ப்பு எட்டாக்கனியாக உள்ளது. அதில் ஆங்கிலம், தமிழ் என இரு மொழிக் கொள்கையை பின்பற்ற அணுமின் நிலைய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், முன்னாள் எம்எல்ஏவும், ஒன்றிய  கவுன்சிலருமான தனபால், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பக்கீர் முகமது,  சி.ஆர்.பெருமாள் கலியபெருமாள், கிங்உசேன் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மன்ற தலைவர் காயத்ரி தனபால் கூறுகையில், அணுமின் நிலையத்தின் கதிர்வீச்சால் சுற்றுப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய், தைராய்டு உள்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. பாதிப்பு மட்டும் சுற்றுப்புற மக்களுக்கு ஏற்பட வேண்டும். ஆனால், வேலை வாய்ப்பு மட்டும் வெளி மாநிலத்தவர்களுக்கு என்ற பாணியில் அணுமின் நிலையம் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது. எனவே, நிலங்களுக்கு தடை விதித்து மக்களை வஞ்சிக்கும் ‘நிலா’ கமிட்டி எல்லையை விலக்களிக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும். சுற்றுப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அணுமின் நிலைய நிர்வாகத்தை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.

Related Stories: