சங்ககிரி அருகே லாரியில் கடத்திய 18.3டன் ரேஷன் அரிசி பறிமுதல்-டிரைவர் கைது; 2 பேருக்கு வலை

சேலம் : சேலம் மாவட்டம் இடைப்பாடி, சங்ககிரி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஎஸ்பி கிருஷ்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் நேற்று காலை சங்ககிரி அருகேயுள்ள  சன்னியாசிபட்டி ரயில்வே கேட் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை  போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 196 மூட்டைகளில் 9.8டன் ரேஷன்அரிசியும்,254 மூட்டைகளில் 8.6டன் ரேஷன் அரிசி குருணையும் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து லாரியுடன், 18.3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், அவர் நாமக்கல் மாவட்டம் கீரனூரை சேர்ந்த பாரத்(24) என்பது தெரிந்தது.  மேலும், தர்மபுரி மாவட்டத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைக்கு கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து லாரி டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தர்மபுரியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கடத்திய திருப்பூரை சேர்ந்த நடராஜ், லாரி உரிமையாளரான சேலத்தை சேர்ந்த ராமசந்திரன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: