பெரியகுளம் அருகே ஜல்லிக்கட்டு காளை வயிற்றில் 35 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆபரேஷன் மூலம் அகற்றம்

பெரியகுளம்: ஜல்லிக்கட்டு காளை வயிற்றில் இருந்து, 35 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கால்நடை மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். தேனியை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவரது 3 வயது ஜல்லிக்கட்டு காளை கடந்த 4 மாதமாக சரியாக தீவனம் சாப்பிடவில்லை. வயிறும் உப்பியது. இதையடுத்து, தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள தேனி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு காளையை அழைத்து வந்தனர்.  பரிசோதனையில் காளையின் வயிற்றில் பிளாஸ்டிக் பைகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, கால்நடை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரிச்சர்ட் ஜெகதீசன் தலைமையிலான மருத்துவக்குழுவினர், காளையின் வயிற்றில் ஆபரேஷன் செய்து, 35 கிலோ பிளாஸ்டிக் பைகள், கட்டுக்கம்பிகள், சாவி, துணி தைக்கும் ஊசி மற்றும் நைலான் கயிறு ஆகியவற்றை வெளியே எடுத்து அகற்றினர். சிகிச்சைக்கு பின், காளைக்கு அளிக்கப்படும் தீவனம், பராமரிப்பு குறித்து, மாட்டின் உரிமையாளருக்கு கால்நடை மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும், தடையை மீறி பொதுமக்கள் பயன்படுத்துவதால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Related Stories: