பஞ்சாபில் தேர்தலுக்கு முன் கட்சி தொடங்கி பாஜகவுடன் கூட்டணி அமைத்த அமரீந்தர் சிங் படுதோல்வி!: வெற்றிக்கனியை சுவைத்தது ஆம் ஆத்மி..!!

சண்டிகர்: பஞ்சாபில் தேர்தலுக்கு முன் கட்சி தொடங்கி பாஜகவுடன் கூட்டணி அமைத்த அமரீந்தர் சிங் படுதோல்வி அடைந்தார். காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று, தனிக்கட்சி ஆரம்பித்து, பாஜகவுடன் கூட்டணி வைத்த அமரீந்தர் சிங், தன்னுடைய சொந்த தொகுதியிலேயே மண்ணை கவ்வி உள்ளார்.  பாட்டியாலா தொகுதியில் ஆம் ஆத்மீ வேட்பாளரிடம் அமரீந்தர் சிங் தோல்வியை தழுவினார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை அமரீந்தர் சிங் தொடங்கியிருந்தார். பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோன்மணி அகாலிதளம் இடையே கடும் போட்டி நிலவியது. அங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம், 3 விவசாய சட்டங்கள் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பஞ்சாப் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்தது. 117 இடங்களை கொண்ட சட்டமன்றத்தில் ஏறத்தாழ 90 இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றுள்ளது.

கடந்த 70 ஆண்டுகாலமாக அகாலிதளம், காங்கிரஸ் என்ற இரண்டு கட்சிகள் கோலூன்றி வந்த மாநிலத்தில், இரண்டு கட்சிகளையும் புறந்தள்ளி ஆம் ஆத்மி கட்சி பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி வேட்பாளரிடம் அனுபவம் மிக்க இந்த மூத்த தலைவர் தோல்வியை சந்தித்தது அதிர்ச்சியாக பார்க்கப்பட்டு வருகிறது. காங்கிரஸிலேயே கொஞ்சம் இணக்கமாக சென்றிருந்தால், இவ்வளவு பெரிய தோல்வியை அமரீந்தர் சந்தித்திருக்கவும் மாட்டார். பாஜகவுடன் கூட்டு சேர்ந்து, தேவையில்லாமல் மாநில மக்களின் அதிருப்தியை அறுவடை செய்திருக்கவும் மாட்டார் என்றே நமக்கு சொல்ல தோன்றுகிறது.

Related Stories: