இந்தியாவின் முயற்சியால் ரஷ்யா, உக்ரைன் ராணுவம் வழி விட்டது சுமியில் சிக்கிய 694 மாணவர்கள் மீட்பு: பாதுகாப்பான பகுதிக்கு பஸ்களில் வந்தனர்; விரைவில் விமானத்தில் நாடு திரும்ப ஏற்பாடு

சுமி: உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட சுமி நகரில் சிக்கி இருந்த 694 இந்திய மாணவர்கள் பாதுகாப்பு வழி தடத்தின் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் பஸ் மூலமாக போல்டாவா நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அங்கிருந்து மாணவர்கள் விரைவில் இந்தியா திரும்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய ராணுவம் பல பகுதிகளை கைப்பற்றி, முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவ் புறநகர் பகுதிகள், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில், குடியிருப்பு கட்டிடங்கள், அரசு கட்டிடங்கள் அனைத்தும் குண்டுவீச்சில் தரைமட்டமாகி உள்ளன.

13வது நாளாக நேற்றும் தொடர்ந்து தாக்குதல் நடந்ததால், மெட்ரோ ரயில் நிலையங்கள், பதுங்கு குழிகளில் பதுங்கி உள்ள மக்கள் உணவு, தண்ணீர், மருந்து கிடைக்காமல் தவிக்கின்றனர். அவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறும் வகையில், தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல், சுமி ஆகிய நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா நேற்று முன்தினம் அறிவித்தது. இதன்படி, இரு நாட்டு பிரதிநிதிகளும் ஒப்புக் கொண்டபடி மனிதாபிமான பாதை வழியாக மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

உக்ரைனில் போர் சூழலுக்கு மத்தியில் சிக்கிய சுமார் 20,000 மாணவர்கள் மற்றும் இந்தியர்களை ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் மூலம் ஒன்றிய அரசு மீட்டு தாய் நாட்டிற்கு அழைத்து வந்துள்ளது. இதற்காக சுமார் 80 விமானங்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். கார்கிவ் உள்ளிட்ட அனைத்து நகரங்களில் இருந்தும் இந்தியர்கள் மீட்கப்பட்டதால், ‘ஆபரேஷன் கங்கா’ திட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், சுமி நகரில் இருந்து மட்டும்  மாணவர்களை மீட்பது மிக சவாலான காரியமாக இருந்து வந்தது. அங்கு வான்வழி மற்றும் தரை வழி தாக்குதல் தொடர்வதால், பாதுகாப்பு கருதி மாணவர்கள் யாரும் அவர்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியே வரவேண்டாம் என இந்திய தூதரகம் வலியுறுத்தியது.

அதே சமயம், சுமியில் சிக்கிய மாணவர்களை மீட்க இந்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. பிரதமர் மோடி நேற்று முன்தினம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சுமியில் இருந்து இந்திய மாணவர்களை மீட்க உதவுமாறு வலியுறுத்தினார். அதே போல், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சுமியில் சிக்கிய இந்திய மாணவர்கள் குறித்து ஐநா.வுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி கவலை தெரிவித்தார்.  உக்ரைன், ரஷ்யா இருதரப்பினரிடம் பல முறை வலியுறுத்தியும், சுமியில் சிக்கித் தவிக்கும் மாணவர்களுக்கான பாதுகாப்பான வழித்தடத்தை செயல்படுத்த முடியவில்லை என அவர் அதிருப்தி தெரிவித்தார்.

இந்திய அரசின் இந்த தொடர் நடவடிக்கையின் மூலம் நேற்று சுமியில் இருந்து இந்தியர்கள் உள்ளிட்டவர்களை பத்திரமாக வெளியேற்ற ரஷ்யா, உக்ரைன் ராணுவம் ஒப்புக் கொண்டன. அங்கு தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளதால், இந்திய மாணவர்கள் 694 பேர் பஸ்கள் மூலமாக மீட்கப்பட்டனர். இது குறித்து ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி டெல்லியில் அளித்த பேட்டியில், ‘‘உக்ரைனில் உள்ள இந்திய கட்டுப்பாட்டு அறையுடன் நான் தொடர்பு கொண்டேன். அவர்கள், சுமியில் இருந்து 694 இந்திய மாணவர்களும் பஸ்களில் போல்டவா நகருக்கு புறப்பட்டு விட்டதாக தெரிவித்தனர்,’’ என்றார். சுமியில் சிக்கியிருந்த மாணவர்கள் கூறுகையில், ‘‘திங்கட்கிழமையே (நேற்று முன்தினம்) கடும் குளிரில் பஸ்சில் ஏற 3 மணி நேரம் காத்திருந்தோம். ஆனால் முடியவில்லை. நல்லவேளையாக செவ்வாய்கிழமை எங்கள் வெளியேற்றம் தொடங்கியது. நாங்கள் அனைவரும் பஸ்சில் ஏறி போல்டவாவுக்கு புறப்பட்டுள்ளோம். விரைவில் பாதுகாப்பான இடத்தை அடைந்து அங்கிருந்து நாடு திரும்புவோம்,’’ என்றனர்.

* இந்தியர்கள் உடனே வெளியேற வேண்டும்

உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் நேற்று விடுத்த அறிவிப்பில், ‘‘உக்ரைனில் மார்ச் 8ம் தேதி காலை 10 மணி முதல் மனிதாபிமான வழிப்பாதைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அந்நாட்டில் உள்ள அனைத்து இந்தியர்களும் வெளியேற வேண்டும். ரயில் உள்ளிட்ட எந்த போக்குவரத்து வசதியை பயன்படுத்தியாவது அண்டை நாடுகளின் எல்லைக்கு வந்து சேர வேண்டும்’’ என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, சுமியில் இருந்து வெளியேறிய 694 இந்திய மாணவர்களும் ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்படுவார்கள் என வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நேற்று ருமேனியாவின் சுசீவாவில் இருந்து புறப்பட்ட 2 விமானங்கள் மூலம் 410 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர். இதே போல, மைகோலைவ் துறைமுக நகரில் சிக்கியுள்ள 75 இந்திய மீனவர்களில் 57 பேர் நேற்று மீட்கப்பட்டதாகவும், மீதமுள்ள 23 பேர் இன்று மீட்கப்படுவார்கள் என்றும் இந்திய தூதரம் தெரிவித்துள்ளது.

பனிக் கட்டிகளை உருக்கி உயிர் வாழ்ந்த மாணவர்கள்

* சுமியில் குடிக்க கூட தண்ணீர் இல்லாததால், ஹாஸ்டலுக்கு வெளியில் பனிக்கட்டிகளை எடுத்து அதை உருகச் செய்து மாணவர்கள் உயிர் வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர்கள் சுமியில் இருந்து வெளியேறி இருப்பதாக கிடைத்த தகவல் மாணவர்களின் பெற்றோருக்கு நிம்மதி அளித்துள்ளது.

* ஏற்கனவே, கார்கிவ் நகரில் சிக்கி இருந்த 300 மாணவர்களும், பாதுகாப்பு வழிதடத்தின் மூலமாக நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்டனர். தற்போது, சுமியில் சிக்கிய இந்தியர்களும் மீட்கப்பட்டு இருப்பதால், உக்ரைனில் சிக்கி இருந்த அனைத்து இந்தியர்களும் கிட்டத்தட்ட மீட்கப்பட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: