காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: 14ம் தேதி தேரோட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலையில்  வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 14ம் தேதி நடக்கிறது. பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக இருந்து வருவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் திருக்கோயில். இந்த கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு கோயிலில் உள்ள ராஜகோபுர விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. இதையடுத்து பந்தக்கால்களுக்கு கலச அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு, பந்தக்கால்கள் கோயில் முன்பு நடப்பட்டது. விழாவில், கோயில் செயல் அலுவலர் தியாகராஜன், அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா, கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் சிவனடியார்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவின்போது தினமும் காலை, மாலை இரு வேளைகளில் ஏகாம்பரநாதரும், ஏலவார் குழலி அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

மார்ச் 11ம்தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும், 12ம் தேதி அதிகார நந்தி வாகனத்திலும் வீதியுலா நடைபெறுகிறது. 13ம்தேதி 63 நாயன்மார்கள் புறப்பாடும், அன்றிரவு வெள்ளி ரதம் வீதியுலா வருதல் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான 14ம் தேதி தேரோட்டமும், 16ம் தேதி கோயில் வரலாற்றை விளக்கும் மாவடி சேவை நிகழ்ச்சியும், 18ம் தேதி அதிகாலை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. மார்ச் 20ம் தேதி தீர்த்தவாரியுடன் பங்குனி உத்திர பெருவிழா நிறைவு பெறுகிறது.

Related Stories: