செங்கம் : செங்கம் அருகே குடிநீர் பிரச்னை தீர்க்க வலியுறுத்தி அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கம் அருகே புளியம்பட்டி கிராம ஊராட்சியில் உள்ள சத்யா நகர் பகுதியில் கிராம நிர்வாகம் சார்பில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கிராம ஊராட்சி நிர்வாகத்திடம் நேரிலும் கோரிக்கை மனு அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் கிராம ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று பகல் 11 மணி அளவில் இளங்குன்னி செங்கம் சாலையில் பெண்கள், பொது மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்தனர். தகவலறிந்து அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைந்து தங்கு தடையின்றி இப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் சாலை மறிலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.