நாகர்கோவிலில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைக்கப்பட்ட பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

நாகர்கோவில்: வடகிழக்கு பருவமழையால் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட்ட பணிகள், பேயங்குழி இரட்டைக்கரை கால்வாயில் ராட்சத இரும்பு குழாய்கள் அமைக்கப்பட்ட பணிகள்,  குமாரகோவில் - பத்மநாபபுரம் புத்தனார் கால்வாய் அணைக்கட்டு பகுதியில் உடைப்பு சீரமைக்கப்பட்ட பணிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட சாலைகளை 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட பணிகள், பேயங்குழி இரட்டைக்கரை கால்வாயிலிருந்து தண்ணீர் ஏற்றுவதற்காக 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ராட்சத இரும்பு குழாய்கள் அமைக்கப்பட்ட பணிகள், குமாரகோவில் - பத்மநாபபுரம் புத்தனார் கால்வாய் அணைக்கட்டு பகுதியில் உடைப்பு ஏற்பட்ட இடங்களில் 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 15.11.2021 அன்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைப்பதற்காக குடிநீர் அபிவிருத்தி திட்டம் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட 12.59 கி.மீ. நீளத்திற்கான 19 சாலைப் பணிகள், மூலதனமானிய நிதி திட்டத்தின் கீழ் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட 40 சாலைப் பணிகள் மற்றும் 25 சிப்பங்கள் மூலம் சாலை அமைக்கும் பணிகள் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, பேயங்குழி, இரட்டைக்கரை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக குளங்களில்  நீர் அளவு மிகவும் குறைந்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்த நிலையில், தமிழ்நாடு மாநில பேரிடர் நிதியிலிருந்து 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3 ராட்சத இரும்பு குழாய்கள் வழியாக தண்ணீர் கொண்டு செல்வதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

பின்னர், குமாரகோவில் - பத்மநாபபுரம் புத்தனார் கால்வாய் அணைக்கட்டு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ள L.S 21/170 km மற்றும் L.S 22/600 km ஆகிய பகுதிகளில் 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வின்போது, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஜெ.ஜி. பிரின்ஸ், திரு. எஸ். ராஜேஷ் குமார், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு. ரெ. மகேஷ், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மா. அரவிந்த், இ.ஆ.ப., நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: