பரிசுத் தொகையை ராணுவத்துக்கு அனுப்புவேன்... உக்ரைன் வீராங்கனை எலினா உருக்கம்

மான்டெரே: டென்னிஸ் போட்டியில் கிடைக்கும் பரிசுத் தொகை முழுவதையும் உக்ரைன் ராணுவத்துக்கு வழங்குவேன் என்று அந்நாட்டு வீராங்கனை எலினா ஸ்விடோலினா உருக்கமாக, கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மெக்சிகோவில்   மான்டெரே மகளிர் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா (27 வயது, 15வது ரேங்க்) பங்கேற்றுள்ளார். நேற்று நடந்த முதல் சுற்றில் ரஷ்யாவின் அனஸ்டசியா போத்தபோவா (20 வயது, 81வது ரேங்க்) உடன் மோதினார். ரஷ்யா - உக்ரைன் போர் சூழலில், இந்த ஆட்டத்தை அரங்கில் இருந்த ரசிகர்கள் ஆர்வமுடன் கவனித்தனர். எலினா ஆட்டம் முழுவதும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் வழக்கத்தைவிட கூடுதல் வேகத்துடன் இருந்தார்.  அனஸ்டசியா பதட்டமில்லாமல்  அமைதியாகவே விளையாடினார். முடிவில் எலினா ஒரு மணி 4 நிமிடங்களில் 6-2, 6-1 என நேர் செட்களில் வென்றார். அதனால் கண்ணீர் மல்க எலினா உணர்ச்சி வசப்பட்டார். வெற்றிப் புன்னகையும் இல்லை.

பின்னர் ‘இந்த வெற்றி எப்படி உங்களுக்கு சிறப்பானது’ என்ற கேள்விக்கு எலினா பொங்கி வழிந்த கண்ணீரை துடைத்தபடி கூறியதாவது: என்னைப் பொறுத்தவரை இங்கு விளையாடிக் கொண்டு இருக்கிறேன். எனக்காக மட்டும் விளையாடவில்லை. நாட்டிற்காக விளையாடுகிறேன். உக்ரைன் ராணுவம், மக்களுக்கு உதவி செய்யவே விளையாடுகிறேன். எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியும் சிறப்பானது. இதில் கிடைக்கும் பரிசுத்தொகையை உக்ரைன் ராணுவத்துக்கு வழங்குவேன். நமது டென்னிஸ் சமூகத்தை உக்ரைனுக்கு பக்கபலமாக நிறுத்துவதே என் இலக்கு. உக்ரேனியர்களான நாங்கள் பயங்கரமான சூழலில் உள்ளோம். இவ்வாறு எலினா கூறினார். ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

Related Stories: