5ம் கட்ட தேர்தல் விறுவிறு உபி.யில் 54% வாக்குப்பதிவு: சமாஜ்வாடி வேட்பாளர் மீது தாக்குதல்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடந்த 5ம் கட்ட தேர்தலில் 54% வாக்குகள் பதிவாகி உள்ளன. உத்தர பிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஜன. 8ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 4 கட்டங்களாக 231 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது. இந்நிலையில், 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு காரணமாக, அசம்பாவிதங்கள் இன்றி தேர்தல் நடந்து முடிந்தது.

குந்தா சட்டமன்றத் தொகுதியில் சமாஜவாடி வேட்பாளர் குல்ஷன் யாதவ் சென்றபோது அவர் கார் மீது கல்வீச்சு தாக்கியதாகவும், அவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இத்தேர்தலில் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா உட்பட 692 வேட்பாளர்கள் களத்தில்  உள்ளனர். ஒன்றிய அமைச்சர் அனுப்ரியா பட்டேலின் தாயும், அப்னா தளம் (கே) கட்சியின் தலைவருமான கிருஷ்ணா படேல் பிரதாப்கர் தொகுதியில்  போட்டியிட்டுள்ளார். 5ம் கட்ட தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 54% வாக்குகள் பதிவாகி இருந்தது. மொத்தம் உள்ள 403  தொகுதிகளில், இதுவரையில் 292 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள 111 தொகுதிகளுக்கு மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் முறையே 6 மற்றும் 7ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடைபெறுகிறது.

* மணிப்பூரில் இன்று முதல்கட்ட தேர்தல் குண்டுவெடிப்பில் 2 பேர் பலி  

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 38 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. மொத்தம் 173 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதற்கான பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்தது. இந்நிலையில், சுராசந்த்பூர் மாவட்டம் கங்பிமுவலில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் இரவு திடீரென குண்டு வெடித்தது. இதில், 2 பேர் உடல் சிதறி பலியாகினர். குழந்தைகள் உட்பட 7 பேர் காயமடைந்தனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், மணிப்பூரில் நடந்த 2வது குண்டுவெடிப்பு  சம்பவம் இது. கடந்த 21ம் தேதி வாங்கு தேரா பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் இந்தோ-திபெத் எல்லை படையை சேர்ந்த 2 பேர் காயமடைந்தனர்.

Related Stories: