ஓவியம் மூலம் கொரோனா விழிப்புணர்வு

நன்றி குங்குமம் தோழி

8ம் வகுப்பு மாணவி அசத்தல்

சமீபகாலமாக சாலைகளில் செல்லும்போது  கொரோனா குறித்த விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் உருவ பொம்மைகளை அதிகம் காணமுடிகிறது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி தனிஷ்கா, தனது ஓவிய திறமை மூலம் பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர். இங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். மாணவி தனிஷ்கா படிப்பில் படு சுட்டி. இவருக்கு 3ம் வகுப்பு படிக்கும் போதே  ஓவியம்  வரைவதில் அதிகளவு ஈடுபாடு ஏற்பட்டது. பெற்றோரும் இவரின் தனித்திறமையை அறிந்து அதனை ஊக்குவித்து வந்தனர். அதனால் படிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் வீட்டில் இருந்தபடியே ஓவியங்கள் வரைந்து பழகினார். இவர் கிருஷ்ணன், ஷீரடி சாய் பாபா மற்றும் பிற இந்து மதக் கடவுள்கள், இயற்கை காட்சிகள், விலங்குகள், பறவைகள் என ஏராளமான ஓவியங்களை தனது கற்பனை திறனில் அபாரமாக வரைந்து அசத்தி வந்தார்.

சமீபகாலமாக உலகையே  அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாக்க கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனாவை ஒழிக்க சமூக இடைவெளி, கை சுத்தம் போன்றவை அவசியம் என்பதை வலியுறுத்தி ஓவியம் வரைந்துள்ளார். இந்த ஓவியங்களை பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். அவ்வாறு வரையப்பட்ட ஓவியங்களை தனது வீட்டில்  பார்வைக்கு வைத்துள்ளார். மாணவியின் அபார திறமையை ஆசிரியைகள் மற்றும்  சக மாணவிகள் பாராட்டினர்.

இது சம்பந்தமாக மாணவி தனிஷ்கா  கூறுகையில் `‘நான் படிக்கும் பள்ளிக்கு எந்த வகையிலாவது பெருமை சேர்க்கும் விதமாக அளப்பரிய சாதனை செய்யவேண்டும் என விரும்புகிறேன். இதற்கு நான் தேர்ந்தெடுத்தது ஓவியக் கலை. நான் வரைந்த ஓவியங்களிலேயே படகு பயணம் ஓவியம், தியாகி பகத்சிங் ஓவியம், கிருஷ்ணன்-ராதை ஓவியம் போன்றவை மிக கஷ்டப்பட்டு வரைந்த ஓவியம்’’ என்றார் தனிஷ்கா.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Related Stories: