நன்றி குங்குமம் தோழி
இன்றைய நவீன யுகத்தில் அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதிக்க துவங்கிவிட்டார்கள். அந்த வகையில் பல வருட பாரம்பரியமான சித்த மருத்துவத்தின் மீது அதீத
காதலால் அதில் பட்டம் பெற்று, இந்த மருத்துவ துறையில் அடுத்த தலைமுறையாக மக்களுக்கான மருத்துவ சேவையில் ஈடுபட்டு வருகிறார் சித்த மருத்துவரான பிரியா. சென்னை
மற்றும் சேலத்தில் ‘ஆதி அகத்தியர் சித்த மருத்துவமனை’ என்ற மருத்துவமனை பெயரில் இவர் சிகிச்சை அளித்து வருகிறார்.
‘‘நாங்க கடந்த 250 வருடமாக தலைமுறை தலைமுறையாக சித்த மருத்துவத்தில் பாரம்பரிய முறையில் வைத்தியம் பார்த்து வருகிறோம். என் முன்னோர்கள் இதில் ஈடுபட்டு வந்ததாலும், அதைப் பார்த்து வளர்ந்த எனக்கும் இந்த துறையில் அதீத ஈடுபாடு ஏற்பட்டது. அதனால்தான் நான் இந்த மருத்துவ துறையை தேர்வு செய்தேன்’’ என்றவர், சித்த மருத்துவத்தில் நாட்பட்ட நோய்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் பற்றியும் விவரித்தார்.
‘‘கடந்த எட்டு தலைமுறைகளுக்கு மேலாக நாங்க இந்த மருத்துவத்தில் ஈடுபட்டு வருகிறோம். அதனால்தான் நானும் முறைப்படி இந்த துறையில் பட்டப் படிப்பினை மேற்கொண்டேன். நாங்க சேலத்தில் வசித்து வருவதால், அங்குள்ள மலைகளில் சித்த மருத்துவம் குறித்த மூலிகைகள் அதிகளவில் கிடைக்கும். இது பாரம்பரியமான இயற்கை முறை வைத்தியம். பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. மருத்துவரின் பரிசோதனை மற்றும் ஆலோசனைப்படி தொடர்ந்து மருந்துகளை உட்கொண்டால் நல்லதொரு சிறப்பான பலன்களை பெற முடியும்.
முடக்குவாதம், குழந்தையின்மை, நாட்பட்ட தோல் நோய்கள், சர்க்கரை வியாதி, சிறுநீரக கோளாறுகள் போன்றவற்றிற்கு பாரம்பரிய முறையில் மருத்துவ சிகிச்சைகள் இதில் உள்ளது. அதற்கான சிகிச்சையினை நாங்க எங்களின் மருத்துவமனையில் அளித்து வருகிறோம். அதே சமயம் சித்த மருத்துவத்தை பொறுத்தவரை இதில் சுயமாக மருத்துவ முறைகளை கையாளக்கூடாது. மேலும், எந்த மூலிகைகளையும் நேரிடையாகவும் பயன்படுத்தக்கூடாது. நல்ல அனுபவம் பெற்ற சித்த மருத்துவரின் அறிவுரைகளையும் கலந்தாலோசித்த பிறகே உங்களின் பிரச்னைக்கு ஏற்ப அவர் பரிந்துரையின் பேரில்தான் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். நாட்பட்ட பல்வேறு வியாதிகளுக்கு சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வுகள் உள்ளன.
நோய் நாடி நோய் முதல் நாடி என்ற அடிப்படையில்தான் ஒவ்வொரு நோயாளிகளுக்கும் அவரின் பிரச்னை அறிந்து முழுமையாக பரிசோதித்த பிறகு மருந்துகளை அளிக்கிறோம். ஒவ்வொரு நபரின் வயது, பிரச்னைக்கு ஏற்ப மருந்துகள் மற்றும் அதனை உட்கொள்ளக்கூடிய அளவுகள் மாறுபடும். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொண்டால் மட்டுமே பலன்களை பார்க்க முடியும்.
பல நூறு வருடங்களுக்கு முன்பே நமது சித்தர்கள் மற்றும் துறவிகள் இந்த மருத்துவ முறையை ஆராய்ந்து, மருந்தளித்து மக்கள் அதனால் பலன்களை பெற்ற காரணத்தாலே இதனை பாரம்பரிய மருத்துவ சிகிச்சை என்கிறோம். அதனை முறையாக செய்வதே சிறப்பு. நாங்க சொந்தமாக மூலிகைப் பண்ணை அமைத்து அதில் கிடைத்தற்கரிய பல மூலிகைகளை பயிரிட்டு வருகிறோம். அதனைக் கொண்டுதான் மருந்துகள் தயாரித்து அளித்து வருகிறோம். மேலும், ஏற்காடு மற்றும் கொல்லிமலை பகுதிகளில் கிடைக்கும் இயற்கை மூலிகைகளை கொண்டும் மருந்துகள் தயாரிக்க பயன்படுத்திக் கொள்கிறோம்’’ என்றவர், என்னென்ன ேநாய்களுக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளது குறித்து பகிர்ந்தார்.
‘‘எல்லா வகையான நோய்களுக்குமே குறிப்பாக நாள்பட்ட சித்த மருத்துவத்தில் நிரந்தர தீர்வு இருக்கிறது. நாள்பட்ட சரும நோய்களுக்கு ஏராளமான மூலிகைகள் மற்றும் மருந்துகள் உள்ளன. அதே போல் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா, சொரியாசிஸ் போன்ற நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் தீர்வுகள் இருக்கிறது. கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு மக்களிடையே சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு நிறைய வந்துவிட்டது. நோய் எதிர்ப்பு சக்திகளுக்கென சித்த மருத்துவ மூலிகைகள் இருப்பதால் பலர் அதனால் பலன்களை பெற்று வருகின்றனர்.
இன்று மக்கள் குறிப்பாக பெண்கள் சந்திப்பது குழந்தையின்மை பிரச்னை. முறையற்ற மாதவிலக்கு, கருமுட்டை உருவாக்கம் மற்றும் விந்தணுக்கள் குறைபாடு, சினைப்பை நீர்க்கட்டிகள், கருப்பை தசை கட்டிகள், எண்டோமெட்ரியோசிஸ், சினைப்பாதை அடைப்புகள், ஹார்மோன் குறைபாடுகள் என பல்வேறு காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை ஏற்படுகிறது. இவை அனைத்திற்குமே பாரம்பரிய மருத்துவத்தில் நிறைய தீர்வுகள் உண்டு. சித்த மருத்துவத்தில் எண்பது வகையான வாத நோய்கள் உள்ளன.
அதில் ஒன்றுதான் இந்த ஆர்த்ரைடிஸ். Rheumatoid Arthritis ஏற்பட்டால் உடலிலுள்ள எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படும். இதற்கும் சித்த மருத்துவத்தில் தீர்வு காணலாம். மலைகளில் இருந்து மூலிகைகளை பெற்றாலும், எங்க பண்ணையில் அழிந்து வரும் அரிய ரக மூலிகை வகைகளை நாங்க பயிரிட்டு வருகிறோம். இதன் மூலம் இது போன்ற அரிய வகை மூலிகைகளை மட்டுமில்லாமல் பாரம்பரிய இயற்கை வழி மருத்துவத்தினை காப்பதும் நமது முக்கியமான கடமை’’ என்று கூறும் டாக்டர் பிரியா, கோல்டன் அச்சீவர்ஸ், அன்பு மருத்துவர் விருது, கோல்டன் குளோபல், பொன் மகள், கலாம் சிறந்த சித்த மருத்துவர் என பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: தனுஜா ஜெயராமன்
