நன்றி குங்குமம் தோழி
‘‘என்னை கை கொடுத்து எழுப்பியவர்கள் அனைவரும் என்னுடைய வாழ்க்கையின் தேவதைகள். அவர்கள் எனக்குக் கொடுத்த ஒளியை மற்றவர்களின் வாழ்விலும், பகிர்ந்து கொடுக்கும் தேவதையாக நான் இருக்க விரும்புகிறேன்’’ என்கிறார் கிருஷ்ணவேணி. இவர் இந்திய வான்படை ஸ்குவாட்ரன் லீடர் மருத்துவ அதிகாரி, சமூக சேவகி என பன்முகத் திறமை கொண்டவர். தற்போது பெங்களூர் விமானபுரா பகுதியில் வசிக்கும் இவரிடம் பேசியதிலிருந்து…
‘‘நான் கரூர் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில்தான் பிறந்தேன். 7-ம் வகுப்பு படிக்கும் போது, என் பெற்றோரை இழந்தேன். சிறுமியாக இருந்த எனக்கு எதிர்காலம் ஒரு பெரிய கேள்விக்குறியாக மாறியது. இனிமேல் பள்ளிக்குச் செல்ல முடியுமா? வாழ்க்கையினை எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்ற பயம் தொற்றிக் கொண்டது. நான் இருளில் மூழ்கி இருந்த நேரத்திலும் கல்வியின் தீபம் என் உள்ளத்தில் அணையவில்லை. சில நல்ல உள்ளங்களின் உதவி கிடைத்தது.
அதைக் கொண்டு விடுதியில் தங்கி பள்ளிப் படிப்பை முடித்தேன். என் வாழ்க்கையின் மிகக் கடினமான காலங்களில் என்னைத் தாங்கி நின்றவர்கள் என் பாட்டியும் என் அண்ணனும்தான். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், நான் பெற்ற வெற்றி சாதாரணமல்ல. கணிதம், அறிவியல் என இரண்டு பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தேன். என் கல்வித் திறனை உணர்ந்த ஒரு ஆசிரியர் என்னை 12-ம் வகுப்பு வரை வழி நடத்தினார்.
அதில் மருத்துவக் கல்வியில் சேர மிகச் சிறிய வித்தியாசத்தில் கட் ஆஃப் மதிப்பெண் இருந்ததால் என்னால் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க முடியவில்லை. அந்த நேரத்தில் நடிகர் சூர்யா அறக்கட்டளை தொடங்கினார். அதன் மூலம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் வழியில் படித்த எனக்கு மருத்துவப் பாடங்கள் ஆரம்பத்தில் சவாலாக இருந்தது. அதனைத் தாண்டி என் மருத்துவப் படிப்பை முடித்தேன். அதன் பிறகு இந்திய ராணுவத்தில் மருத்துவ அதிகாரியாக ேசர்ந்தேன். ஆறு ஆண்டுகள் பணியாற்றி மேஜர் பதவியை அடைந்தேன்.
ஆனால், என் பயணம் அங்கேயே முடியவில்லை. மனித உடல் வான்வழி சூழலில் எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் இந்திய வான்படையில் ஸ்குவாட்ரன் லீடர் பதவியில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பினை கொடுத்தது’’ என்றவர், அவர் சந்தித்த சவால்கள் பற்றி பகிர்ந்தார்.
‘‘ஆரம்பத்தில் நான் சந்தித்த சவால்கள் முற்றிலும் தொழில்முறை மட்டுமல்ல… சமூக ரீதியாகவும் இருந்தது. குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து வரும் பெண்களுக்கு, சமூகம் பல நேரங்களில் ஒரு வரம்பை நிர்ணயித்து விடுகிறது. ஒரு பெண் அந்த வரம்பைத் தாண்டி கனவு காண ஆரம்பித்தால், சங்தேகங்களும், எதிர்ப்புகளும் வரும். நானும் அந்த அனுபவங்களைச் சந்தித்தேன். நான் நம்புவது ஒன்றுதான். ஒரு பெண்ணுக்குத் தனிப்பட்ட அடையாளமும், பொருளாதார சுதந்திரமும் மிகவும் அவசியம். அதை அடைவதற்கு அவள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். முக்கியமாக, எல்லைகளைத் தாண்டி தைரியமாக கனவு காண வேண்டும்.
நான் இந்தப் பாதையை தேர்வு செய்ய முக்கிய காரணம் என்னைப் போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த சமூகத்திற்கும், தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துப் பணியாற்றும் படை வீரர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் என்னை இந்த துறைக்குள் இழுத்து வந்தது. ஒரு பெண் உயர்ந்தால் அவள் வாழ்க்கை மட்டுமல்ல… அவளைப் பார்த்து மேலும் பல பெண்கள் முன்னேறுவார்கள்’’ என்றவர், தற்போது ஏரோஸ்பேஸ் மெடிசன் பயின்று வருகிறார்.
‘‘ராணுவ மருத்துவ அதிகாரியாக பணியாற்றிய அனுபவத்திற்கு அப்பாற்பட்டு, மருத்துவ மேற்படிப்பு குறித்து யோசித்த போது ஏரோஸ்பேஸ் மெடிசன் என்னை வெகுவாக கவர்ந்தது. எனக்குள் எப்போதும் ஒரு கேள்வி இருக்கும். மனிதன் தனது இயல்பான சூழலை விட்டு வெளியே சென்றால், அவன் உடல் எவ்வாறு செயல்படும்? மருத்துவத்தில், நாம் மனிதர்களுக்கு அவர்களின் இயல்பான சூழலில் சிகிச்சை அளிப்போம். ஆனால், ஏரோஸ்பேஸ் என்பது இயல்பற்ற சூழலில், உயரம், அழுத்த மாற்றம் போன்ற நிலைகள் கொண்டது. அதில் மனித உடல் எப்படி இயங்குகிறது என்பதைப் புரிந்து கொண்டு, அதை முன்னதாகவே கணித்துப் பாதுகாக்க வேண்டும்.
விமானிகள், விண்வெளி வீரர்களின் உடல்நிலை சீராக வைத்து பாதுகாப்பையும், செயல்திறனையும் உறுதிசெய்ய வேண்டும். எல்லாவற்றையும் விட, மனிதர்கள் பாதுகாப்பாக பறக்க என் படிப்பு உதவும் என்ற உணர்வு. அது ஒரு வித பெருமிதம்’’ என்று கூறும் கிருஷ்ணவேணி பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்குக் கல்வி உதவி மட்டுமில்லாமல் அவர்களின் வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருகிறார்.
‘‘நமக்குக் கிடைத்ததை சமூகத்திற்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும். கல்வி என்ற ஒளி நம்மிடம் மட்டுமே தங்கிவிடக்கூடாது. அடுத்த தலைமுறைக்கும் சென்றடைய வேண்டும். அந்த எண்ணத்தோடுதான், நண்பர்களுடன் சேர்ந்து பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகளுக்குக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ‘கற்கை நன்றே’ என்ற முயற்சியை தொடங்கினோம்.
கல்வி மட்டுமில்லாமல் உடல் நலத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். குறிப்பாக பெண்களின் மாதவிடாய், சுகாதாரம், மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும், தொற்று நோய்கள், புற்றுநோய்கள் பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடம் கொண்டு செல்ல முயற்சி செய்து வருகிறோம். மருத்துவ துறையில் பல இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை.
அதனை மக்கள் எளிதாக புரிந்து கொள்ளும்படிதான் நாங்க செயல்பட்டு வருகிறோம். அதே நேரத்தில் குழந்தைகளுக்குக் கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லி அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம். மலைப்பகுதி பழங்குடி பகுதிகளில், சிறிய நூலகங்களை உருவாக்கி, குழந்தைகளுக்கு படிக்கும் பழக்கத்தை வளர்த்து வருகிறோம். மருத்துவ வசதி குறைந்த பகுதிகளில், மருத்துவ முகாம்கள் நடத்தி, அடிப்படை சுகாதார சேவைகளையும் மக்களிடம் கொண்டு சென்று வருகிறோம்.
கல்வியில் எந்த நிலையில் இருந்தாலும், அது நம்மை உயர்த்தும் சக்தி கொண்டது. உங்கள் கனவு மெய்ப்பட, கடினமாக உழைக்க வேண்டும் என கல்வியை விட்டு விடாமல் தொடர்ந்தால் வாழ்க்கையில் நினைத்த இலக்கினை அடைய முடியும். குறிக்கோளுடன் நடந்தால் பாதை தானாகவே திறக்கும். என்னால் முடியும் போது, உங்களாலும் கண்டிப்பாக முடியும்’’ என்றார் கிருஷ்ணவேணி.
தொகுப்பு: பொ.ஜெயச்சந்திரன்
