புரோ கபடி லீக் பைனல்; பாட்னாவை வீழ்த்தி முதன் முறையாக தபாங் டெல்லி சாம்பியன்

பெங்களூரூ: 12 அணிகள் பங்கேற்ற 8வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி போட்டியில் 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதின. இதில் முதல் பாதியில் பாட்னா ஆதிக்கம் செலுத்தியது. இரு அணிகளும் ரெய்டு மூலமே புள்ளிகளை சேர்த்தனர். முதல் பாதியில் 17-15 என பாட்னா முன்னிலை வகித்தது. 2வது பாதியில் தபாங் டெல்லியின் கை ஓங்கியது. பாட்னா ஆட்டத்தின் 10வது நிமிடம் வரை முன்னிலை வகித்த நிலையில் டெல்லி ரெய்டர் விஜய் அடுத்தடுத்து புள்ளிகளை குவித்து எதிரணியை மிரட்டினார். கடைசி விநாடி வரை விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் 37-36 என ஒரு புள்ளி வித்தியாசத்தில் டெல்லி வெற்றிபெற்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

அந்த அணியின் ரெய்டர் விஜய் 8 டச், 5 போனஸ், ஒரு டேக்கில் என 14 புள்ளிகளும், நவீன்குமார் 13 புள்ளிகளும் எடுத்தனர். பாட்னா தரப்பில் சச்சின் 10, குமான் சிங் 9 புள்ளிகள் எடுத்தனர். சாம்பியன் பட்டம் வென்ற டெல்லிக்கு ரூ.3 கோடியும், 2வது இடம் பிடித்த பாட்னாவுக்கு ரூ.1.8 கோடியும் பரிசுத்தொகை கிடைத்தது. இந்த தொடரில் மொத்தம் 304 புள்ளிகள் எடுத்த பெங்களூரு கேப்டன் பவன்குமார் ஷெராவத் சிறந்த ரெய்டராகவும், 86 டேக்கில் பாயின்ட் எடுத்த பாட்னாவின் முகமது ரேசா சிறந்த டிபென்டராகவும் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது. மொத்தம் 207 புள்ளி எடுத்த டெல்லியின் நவீன்குமாருக்கு தொடரில் சிறந்த மதிப்புமிக்க வீரர் விருதுடன் ரூ.20 லட்சம் பெற்றார். சீசனின் வளர்ந்து வரும் வீரராக புனேரியின் மோஹித் கோயட் ரூ.8 லட்சம் பெற்றார். கடந்த சீசனின் இறுதிப்போட்டியில், பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் தபாங் டெல்லி தோல்வியுற்று 2ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: