வேகமாக பரவக்கூடிய ஒமிக்ரான் பிஏ.2 வகையால் அடுத்த அலை உருவாகுமா?

புதுடெல்லி: ஒமிக்ரான் பிஏ.2 வைரஸ் கொரோனா புதிய அலையை உருவாக்குவதற்கு வாய்ப்பில்லை என்று கொரோனா பணிக்குழு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் பிஏ.1 வைரசை தொடர்ந்து அதில் இருந்து உருமாற்றம் அடைந்த பிஏ2 வைரஸ் உலக அளவில் வேகமாக பரவி வருகிறது. தொற்று நோயியல் நிபுணர் எரிக் பீகல் டிங், பிஏ.2 மாறுபாடானது கவலையை ஏற்படுத்தக்கூடியதாக அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சுகாதார அமைப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தார். இந்நிலையில் பிஏ.2 வைரஸ் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அலையை உருவாக்குவதற்கு வாய்ப்பில்லை என்று மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்திய மருத்துவ அசோசியேஷனின் தேசிய கொரோனா பணிக்குழு துணை தலைவர் மருத்துவர் ராஜீவ் கூறுகையில், ‘‘பிஏ.2 என்பது பிஏ.1ன் துணை பரம்பரையாகும்.  பிஏ.2 புதிய வைரஸ் அல்லது புதிய திரிபு இல்லை. எனினும் இது பிஏ.1 பிறழ்வை காட்டிலும் அதிகமாக பரவும் தன்மை கொண்டாக இருக்கும். வைரஸ் பிறழ்வானது மற்றொரு கொரோனா அலையை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் இல்லை’’ என்றார்.

16,051 ஆக சரிந்தது: நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது தொடர்ந்து குறைந்து வருகின்றது. ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடு முழுவதும் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றின் காரணமாக புதிதாக 16,051 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,28,38,524 ஆகும். சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,02,131 ஆக குறைந்துள்ளது. புதிதாக 206 உயிரிழப்புக்கள் பதிவான நிலையில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையானது 5,12,109 ஆக உயர்ந்துள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: