ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை; விஷவாயுக்காக ஆன் லைனில் பொருட்கள் வாங்கியுள்ளனர்: போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்

திருவனந்தபுரம்: கடன் தொல்லை காரணமாக விஷவாயு செலுத்தி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதற்காக ஆன் லைனில் விஷ வாயுக்கான பொருட்களை அவர்கள் வாங்கியது ேபாலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சந்தப்புரம் பகுதியை சேர்ந்தவர் ஆஷிக் (41). இவரது மனைவி அபீரா (34). இவர்களது மகள்கள் அஸ்ரா பாத்திமா (14) மற்றும் அனோம் நிஷா பாத்திமா (8). ஆஷிக் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.

இவர்கள் சந்தப்புராவிலுள்ள வீட்டில் வசித்து வந்தனர். கீழ் மாடியில் பெற்றோரும், மேல்மாடியில் இவர்களும் இருந்தனர். இந்நிலையில் நேற்று நீண்ட நேரமாக இவர்கள் யாரும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதையடுத்து ஆஷிக்கின் பெற்றோர் மேல் மாடிக்கு சென்று பார்த்தபோது அறைக் கதவு பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக தட்டியும் திறக்கவில்லை. இதனால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது நான்கு பேரும் படுக்கையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருச்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் நான்கு பேரும் விஷவாயு சுவாசித்திருந்தது தெரியவந்தது. இதற்காக ஆஷிக் ஆன்லைனில் கால்சியம் கார்பனேட் மற்றும் சிங்க் ஆக்சைடை வாங்கியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அறைக்கதவு மற்றும் ஜன்னல்களை பூட்டி பின்னர் விஷ வாயுவை செலுத்தி அவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். விஷ வாயு வெளியேறாமல் இருப்பதற்காக அறையின் ஜன்னல் மற்றும் கதவுகளில் டேப்பை பயன்படுத்தி ஒட்டி வைக்கப்பட்டிருந்தது.

ஆஷிக்குக்கு கடன்தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால்தான் அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். உண்மையில் கடன் தொல்லை தானா? அல்லது குடும்பத்தில் வேறு ஏதாவது பிரச்னைகள் உண்டா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் உறவினர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: