கோஹ்லி, ரிஷப் அரைசதம்.. இந்தியா அபார வெற்றி

கொல்கத்தா: வெஸ்ட் இண்டீஸ் உடனான 2வது டி20 போட்டியில் இந்தியா அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் போலார்டு முதலில் பந்துவீச முடிவு செய்தார். இது அவர் களமிறங்கும் 100வது சர்வதேச டி20 போட்டியாகும். இதையொட்டி ‘போலார்டு 100’ என பொறிக்கப்பட்ட சிறப்பு சீருடையை சக வீரர்கள் அவருக்கு பரிசளித்தனர். ரோகித், இஷான் இருவரும் இன்னிங்சை தொடங்கினர்.ஆனால், துவக்க வீரர்கள்  சொதப்பினர். இதனால்  இந்தியா 9.5 ஓவரில் 72 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து சற்றே திணறியது. இந்த நிலையில், கோஹ்லி - பன்ட் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 34 ரன் சேர்த்தனர். சர்வதேச டி20ல் தனது 30வது அரைசதத்தை பதிவு செய்த கோஹ்லி 52 ரன் எடுத்து (41 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) சேஸ் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். இதையடுத்து, பன்ட்டுடன் வெங்கடேஷ் இணைந்தார். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை பதம் பார்க்க, இந்திய ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

வெங்கடேஷ் 33 ரன் (18 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஷெப்பர்ட் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன் குவித்தது. பன்ட் 52 ரன் (28 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), ஹர்ஷல் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 187 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதிரடியில் இறங்கினார். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதனால் இலக்கை நோக்கி தொடர்ந்து முன்னேறினர்.   இந்நிலையில், 19வது ஓவரில் நிகோலஸ் பூரன் 62(41பந்து) விக்கெட்டை புவனேஷ்குமார் எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.  அடுத்து கேப்டன் போலார்டு  களமிறங்கினாலும் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் 20 ஓவர் முடிவில், 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய வெற்றிபெற்றது. வெ.இண்டீசின் ரோவ்மான் பவெல்  4 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 68*(36) ரன்கள் எடுத்து இறுதி வரை உறுதியாக நின்று போராடினார்.

Related Stories: