கிருஷ்ணா நதி நீர் பிரச்னையை மாநில அரசுகளால் பேசி தீர்த்து கொள்ள முடியாது: கர்நாடகா, மகாராஷ்டிரா கருத்து

புதுடெல்லி: கிருஷ்ணா நதி நீர் பிரச்னையை மாநில அரசுகளால் பேசி தீர்க்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா, மகாராஷ்டிரா அரசுகள் தெரிவித்துள்ளன.இந்தியாவின் மிக நீளமான ஆறுகளில் கிருஷ்ணா நதியும் ஒன்று. இது, 1,300 கிமீ நீளம் கொண்டது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களின் வழியாக பாய்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் சாத்தாரா மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் 1,300 மீட்டர் உயரத்தில் உள்ள மஹாபலீஸ்வர் என்ற இடத்தில் உற்பத்தியாகிறது. ஆந்திராவில் உள்ள ஹேமசலதேவி என்ற இடத்தில் வங்கக்கடலில் கலக்கிறது. இதனால், கிருஷ்ணா நீரால் மூன்று மாநிலங்களுக்கு இடையில் பல ஆண்டுகளாக தீராத பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்னிலையில் மூத்த வழக்கறிஞர்கள் ஷியாம் திவான், சி.எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் நேற்று புதிய கோரிக்கையை வைத்தனர். அதில், ‘கிருஷ்ணா நதி நீர் தொடர்பான வழக்கை விசாரித்த முந்தைய அமர்வு தற்போது இல்லை. அதனால், புதிய அமர்வை உருவாக்க வேண்டும்,’ என தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘இந்த பிரச்னையை ஏன் மாநிலங்களே பேசி தீர்த்துக் கொள்ள முடியாதா?’ என கேட்டார். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர்கள், ‘குறிப்பிட்ட பிரச்னை என்றால் தீர்த்துக் கொள்ளலாம். ஆனால், இதில் உள்விவகாரங்கள் அதிகமாக உள்ளதால், கண்டிப்பாக மாநிலங்களால் பேசி தீர்த்து கொள்ள முடியாது. அதனால், நீதிமன்றத்தின் தலையீடு அவசியம் வேண்டும்,’ என தெரிவித்தனர். இதையடுத்து, புதிய அமர்வு விரைவில் அறிவிக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

Related Stories: